இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா தகவல்
இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் (Asteroids) கடந்து செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இவை பூமியை தாக்காமல், பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்த அமைப்பு. பூமியிலிருந்து சராசரியாக 3.85 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது சந்திரன். தற்போது பூமியைக் கடந்து செல்லவிருக்கும் இந்த சிறுகோள்களானது அதை விட மிகக் குறைந்த தூரத்தில் பூமியைக் கடக்கவிருக்கின்றன. 2023 TP7, 2023 TH4, 2022 U010, 2023 TM14 மற்றும் 2023 TY19 என இந்த ஐந்து சிறுகோள்களுக்கும் பெயரிட்டிருக்கிறது நாசா. ஒரு சிறுகோள் பூமியை முதலில் கடந்து செல்லும் ஆண்டைக் கொண்டு அவற்றுக்கு பெயரிட்டிருக்கிறது நாசா.
பூமியைக் கடந்து செல்லும் சிறுகோள்கள்:
இவற்றில் 2023 TH4 சிறுகோளானது 44 மீட்டர் அளவுடன் அளவில் சிறிய சிறுகோளாக இருக்கிறது. இந்த சிறுகோள் தான் பூமியை 2.1 மில்லியன் கிலோமீட்டர்கள் என்ற குறைவான தூரத்தில் கடந்து செல்லவிருக்கிறது. இதே சிறுகோளானது இதுற்கு முன்னர் 2015 மார்ச் மாதத்திலும் பூமியைக் கடந்து சென்றிருக்கிறது. அடுத்ததாக, 2024 மே மாதம் மீண்டும் பூமியைக் கடந்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஐந்து சிறுகோள்களில் 2023 TP7 சிறுகோளே, 82 மீட்டர் அளவுடன் பெரிய சிறுகோளாக இருக்கிறது. நொடிக்கு 11.6 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த சிறுகோளானது, பூமியிலிருந்து 3 மில்லியன் கிமீ தொலைவில் கடந்து செல்லவிருக்கிறது.
அப்போலே சிறுகோள் கூட்டத்தைச் சேர்ந்த சிறுகோள்கள்:
இந்த ஐந்து சிறுகோள்களில், 58 அடி அளவுடைய 2023 TY19 சிறுகோள் மட்டும் அமோர் சிறுகோள் கூட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. மற்ற நான்கு சிறுகோள்களும் அப்போலோ சிறுகோள் கூட்டத்தைச் சேர்ந்தவை. இவற்றில் 54 அடி அளவுடைய 2023 TM14 சிறுகோளானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் பூமியைக் கடந்து சென்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இன்றும் பூமியைக் கடந்து செல்லவிருக்கிறது. இந்த TM14 சிறுகோளானது, 2032ம் ஆண்டு வரை ஒவ்வொரு அக்டோபர் மாதமும் பூமியை கடந்து செல்லும் எனத் தெரிவித்திருக்கிறது நாசா. பூமியிலிருந்து 50 மில்லியன் கிமீ தொலைவுக்குள் பூமியைக் கடந்து செல்லும் விண்வெளிப் பொருட்களை NEO (Near Earth Objects) என நாசா வகைப்படுத்தும். அந்த வகையில், மேற்கூறிய ஐந்து சிறுகோள்களும் NEO-வாகவே வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.