ஏஐயால் வேலை பறிபோகும் அச்சமா? 3 மாதங்கள் வரை கைகொடுக்கும் 'Job Insurance'; நீங்கள் தகுதியானவரா?
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் 2026 நவம்பர் வரை 742 பணிநீக்க நிகழ்வுகள் மூலம் 2,09,841 ஊழியர்கள் வேலையிழந்துள்ள நிலையில் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) வேலை பறிபோகுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 579 பணியிடங்கள் குறைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நாளொன்றுக்கு சராசரியாக 642 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில் வீட்டுக் கடன் தவணை மற்றும் மாதாந்திர செலவுகளை சமாளிக்க இந்தியாவில் வழங்கப்படும் வேலை இழப்பு காப்பீடு ஊழியர்களுக்குத் தற்காலிக நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்தியாவில் இது தனிக் காப்பீடாக அல்லாமல் விபத்துக் காப்பீடு அல்லது தீவிர நோய்க் காப்பீடு ஆகியவற்றுடன் துணைக் காப்பீடாக வழங்கப்பட்டு 3 மாதங்கள் வரை நிதி உதவி அளிக்கிறது.
ஏஐ பணிநீக்கம்
வேலை இழப்பு காப்பீட்டிற்கு யார் தகுதியானவர்கள் மற்றும் ஏஐ பணிநீக்கத்திற்கு இது பொருந்துமா?
பைசாபஜார் தகவலின்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் நிரந்தர சம்பளத்திற்கு பணியாற்றுபவர்கள் மட்டுமே இந்த காப்பீட்டைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
சுயதொழில் செய்பவர்கள் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு இந்தக் காப்பீடு பொருந்தாது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை பறிபோனாலும் நிறுவனங்கள் அதனை நேரடியாகக் குறிப்பிடாமல் சாதாரண பணிநீக்கமாகவே கடிதம் வழங்குவதால் பாலிசி விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் நிதி உதவி பெற முடியும்.
இருப்பினும் பாலிசி வாங்கும் முன் எந்த மாதிரியான பணிநீக்கங்களுக்கு பணம் வழங்கப்படும் என்பதை தெளிவாக படித்துப் பார்ப்பது அவசியமாகும்.
காப்பீட்டுத் தொகை
எந்தெந்த சூழ்நிலைகளில் வேலை இழந்தால் காப்பீட்டுத் தொகை கிடைக்காது?
இந்தக் காப்பீட்டை எடுத்த பிறகு 30 முதல் 90 நாட்கள் வரை காத்திருப்புக் காலம் அமலில் இருக்கும் என்பதால் அந்தக் காலத்திற்குள் வேலையிழந்தால் இழப்பீடு கோர முடியாது.
அதேபோல் தகுதிகாண் பருவத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டாலோ ஊழியர் தானாக முன்வந்து ராஜினாமா செய்தாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ காப்பீடு வழங்கப்படாது.
மேலும் பணியில் மோசமான செயல்திறன் நேர்மையின்மை அல்லது மோசடி போன்ற காரணங்களுக்காக நிறுவனத்தால் நீக்கப்பட்டாலும் காப்பீட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
வேலை இழந்தால் காப்பீட்டுத் தொகையை கிளைம் செய்வது எப்படி மற்றும் தேவையான ஆவணங்கள்
பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் ஊழியர்கள் உடனடியாகத் தங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தகவல் தெரிவித்து வேலையின்மைக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கையொப்பமிடப்பட்ட கிளைம் விண்ணப்பத்துடன் நிறுவனம் வழங்கிய பணிநீக்கக் கடிதத்தை இணைப்பது மிக முக்கியமானதாகும்.
இத்துடன் கடைசி 3 மாதச் சம்பள ரசீதுகள் ஃபார்ம் 16 நிறுவனத்தின் தொடர்பு விவரங்கள் பாலிசி நகல் அடையாள சான்று மற்றும் வயது சான்று ஆகியவற்றையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஆவணங்களை சரிபார்த்த பிறகு பாலிசி விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற்கு மாதாந்திரத் தொகை வழங்கப்படும்.