தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா?
உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறவிருக்கும் முதல் தேர்தலை இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் அடுத்த ஆண்டு சந்திக்கவிருக்கின்றன. உலகில் இணையப் பயன்பாடு அதிகமான பின்பு, தேர்தல் போன்ற முக்கியமான சமயங்களில் போலியான மற்றும் உண்மைத் தன்மையற்ற தகவல்களின் பரவல் அதிகரிக்கும். தற்போது டெக்ஸ்ட்-டூ-இமேஜ் வகை AI கருவிகளின் வருகையும் அதிகரித்திருக்கும் நிலையில், அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தலின் போது, AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான தகவல்கள் முக்கியமாக போலியாக AI கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புகைப்படங்களின் பரவல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் முன்னாள் சிஇஓவின் எச்சரிக்கை:
கூகுளின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான எரிக் ஸ்மித், வரும் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மை குறித்து எச்சரித்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகளால் உருவாக்கப்படும் தவறான தகவல்களை விட, அதிலிருந்து சரியான கருத்துக்களை பிரித்தறிவதற்குத் தேவையான கருவிகள் இல்லாததே அதனை ஆபத்தானதாக மாற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். சாதாரணமாக பரப்பப்படும் போலியான தகவல்களை விட, திட்டமிட்டு குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பரப்பப்படும் போலியான தகவல்கள் மற்றும் புகைப்படங்களால் தேர்தல்களின் முடிவுகளில் கூட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்திருக்கிறார்கள் வல்லுநர்கள்.
குறைவான பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்:
மிட்ஜர்னி போன்ற டெக்ஸ்ட்-டூ-இமேஜ் AI கருவிகளில், போலியான தகவல்களைக் கொடுத்து புகைப்படங்களை உருவாக்கக் கோரினால் 85% அதுபோன்ற புகைப்படங்கள் அக்கருவிகள் உருவாக்கிக் கொடுப்பதாக சோதனை ஒன்றில் கண்டறிந்திருக்கிறார்கள். AI புகைப்படங்களால் உருவாக்கப்பட்டும் போலியான புகைப்படங்கள் மற்றும் போலியான தகவல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் அல்லது அவற்றிலிருந்து சரியான தகவல்களை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வகையிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் தற்போது தேவை. இதுமட்டுமின்றி, இணையப் பயனர்களிடமும் AI கருவிகளின் இருப்பு குறித்தும், அவை உருவாக்கும் போலியான தகவல்களால் உருவாகக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் எனத் தெரிவித்திருக்கிறார்கள் வல்லுநர்கள்.