போலி கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி! இனி வீடியோ செல்ஃபி எடுத்தால் ஃபேஸ்புக்கில் இலவச வெரிஃபைட் பேட்ஜ்
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளப் பயனர்கள் தாங்கள் தொடர்பு கொள்ளும் நபர் உண்மையான மனிதரா அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி கணக்கா என்பதைக் கண்டறிய ஃபேஸ்புக் நிறுவனம் 'Facebook Verified' என்ற புதிய இலவச வேரிஃபிகேஷன் பேட்ஜை அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் போலி கணக்குகள், புகைப்படங்கள் மற்றும் தானியங்கி உரையாடல்கள் அதிகரித்து வரும் சூழலில், பயனர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்ஜைப் பெற பயனர்கள் ஒரு குறுகிய வீடியோ செல்ஃபியைப் பகிர்ந்து கணக்கை உறுதி செய்ய வேண்டும்.
இலவச பேட்ஜ்
பிரபலங்களுக்கு அல்லாமல் சாதாரண பயனர்களுக்கான இலவச பேட்ஜ்
பொதுவாகப் பிரபலங்களுக்கும் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படும் நீல நிற பேட்ஜ் போலன்றி, இந்த 'Facebook Verified' பேட்ஜ் முற்றிலும் சாதாரண பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பெற தகுதியுள்ள பயனர்கள் தங்கள் போனில் ஒரு சிறிய வீடியோ செல்ஃபியை பதிவு செய்ய வேண்டும்.
அந்த வீடியோவை பயனரின் கணக்கில் உள்ள புகைப்படங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பிட்டுப் பார்த்து, கணக்கின் உரிமையாளர் உண்மையான மனிதர் தான் என்பதை உறுதி செய்யும்.
இந்த வெரிஃபிகேஷன் முறை முற்றிலும் இலவசமானது மற்றும் சில நிமிடங்களில் முடிந்துவிடும்.
தகுதி
தகுதி வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்
இந்த இலவச வெரிஃபிகேஷன் பேட்ஜைப் பெற பயனர்கள் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
ஏமாற்று வேலைகள், ஆன்லைன் மோசடிகள் அல்லது தவறான நடத்தைகளில் ஈடுபட்ட வரலாறு இல்லாத 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.
மேலும், ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் புரொபஷனல் மோடில் இயங்கும் கணக்குகளுக்கு இந்த அம்சம் கிடைக்காது.
ஒருமுறை மட்டுமே செய்யப்படும் இந்த சோதனையின் மூலம் பயனர் கணக்குகள் உண்மையானவை என்பது உறுதி செய்யப்படுகிறது.
பாதுகாப்பு
மார்க்கெட்பிளேஸ் மற்றும் டேட்டிங் தளங்களில் கிடைக்கும் பாதுகாப்பு
உறுதி செய்யப்பட்ட பயனர்களின் பேட்ஜ்கள் சுயவிவரப் பக்கம், ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ், டேட்டிங் தளங்கள் மற்றும் குழுக்கள் போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்படும்.
இதன் மூலம் அந்நியர்களிடம் பொருள் வாங்கும்போதோ, டேட்டிங் தளங்களில் உரையாடும்போதோ அல்லது குழுக்களில் இணையும்போதோ எதிர்முனையில் இருப்பது உண்மையான மனிதர் தானா என்பதைப் பயனர்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
எதிர்காலத்தில் செய்திகள் தோன்றும் ஃபீட் பகுதிகளிலும் இந்த பேட்ஜை விரிவுபடுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
நற்சான்றிதழ் அல்ல
வெரிஃபிகேஷன் பேட்ஜ் என்பது நற்சான்றிதழ் அல்ல
இந்த வெரிஃபிகேஷன் பேட்ஜ் ஒரு கணக்கு உண்மையான மனிதருடையது என்பதை மட்டுமே உறுதி செய்யும் என்றும், அந்தப் பயனரின் நடத்தைக்கு ஃபேஸ்புக் எந்த உத்தரவாதமும் அளிக்காது என்றும் நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது.
வெரிஃபை செய்யப்பட்ட கணக்குகளும் ஃபேஸ்புக்கின் சமூக விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் உலகளாவிய அளவில் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கவுள்ளது.