தன்னிச்சையாக அனுப்பப்பட்ட 'பிரெண்டு ரெக்வஸ்ட்'கள்.. பயனர்களிடம் மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக் நிறுவனம்!
ஃபேஸ்புக் பயனர்கள் வேறு ஒருவரது கணக்கிற்கோ அல்லது பக்கத்திற்கோ சென்று பார்வையிடும் போது தானாகவே ஃப்ரெண்டு ரெக்வஸ்ட் அனுப்பப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் இதுகுறித்து பல ஃபேஸ்புக் பயனர்களும் புகார் தெரிவித்துள்ள நிலையில், அது ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட ஒரு சிறிய கோளாறு தான் என்று கூறி, பயனர்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது ஃபேஸ்புக். மேலும், அந்தக் கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தக் கோளாறானது பங்களாதேஷ், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஃபேஸ்புக் பயனர்களுகளை அதிகளவில் பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கோளாறை உடனடியாக கவனித்து சரிசெய்து விட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.