
எக்ஸில் பரவும் போலி தகவல்கள்.. எலான் மஸ்க்கை எச்சரித்த ஐபோப்பிய ஒன்றியம்!
செய்தி முன்னோட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸ் தளத்தில் அதிகமாப் பரவும் போலியான தகவல்கள் குறித்து, எக்ஸின் உரிமையாளரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கை எச்சரித்திருக்கிறார் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி ப்ரெடன்.
சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு போலியான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் இன்னபிற உள்ளடக்கங்கள் எக்ஸ் தளத்தின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பரப்பப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் அவர்.
ஐரோப்பிய ஒன்றியமானது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை மாடரேட் செய்வதற்கென தனிப்பட்ட சட்டங்களை வகுத்திருக்கிறது. அதனை எக்ஸ் முறையாக பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் பதிலளிக்க உத்தரவு:
மேற்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் எலான் மஸ்க் பதிலளிக்க வேண்டும் என அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தியரி ப்ரெடன்.
மேலும், எக்ஸ் தளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்தெந்த வகையான உள்ளடக்கங்கள் அத்தளத்தில் அனுமதிக்கப்படுகின்றன, அப்படி அனுமதிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மட்டுமே அத்தளத்தில் பதிவிடப்படுகின்றன என்பதை உறுதி செய்ய எக்ஸ் என்னென்ன நடவடிக்களை மேற்கொள்கிறது என்பது குறித்து அந்நிறுவனம் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹமாஸ் தொடர்பான கணக்குகளையும், ஹமாஸ் தாக்குதல் தொடர்பான போலியான மற்றும் வன்முறை நிறைந்த உள்ளடக்கங்களை தொடர்ந்து நீக்கி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது எக்ஸ். இதுவரை ஹமாஸ் தொடர்பான 10,000 உள்ளடக்கங்களை நீக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.