விண்வெளியில் உலக சாக்லேட் தினத்தை கொண்டாடிய விண்வெளி வீரர்கள்; வைரலாகும் காணொளி
நேற்று உலகமுழுவதும் சாக்லேட் தினத்தை கொண்டாடிய நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களும் இதனை கொண்டாடியுள்ளனர். எப்படி தெரியுமா? டோர்டில்லாக்கள் என்றழைக்கப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டியில், அறிவியல் பரிசோதனையின் ஒரு பகுதியாக இருக்கும் மென்மையான சாக்லேட் மியூஸ் தடவி அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை நறுக்கி அலங்கரித்து சாக்லேட் தினத்தை கொண்டாடினர். இது பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) இன்ஸ்டாகிராமில் விண்வெளியில் புவியீர்ப்பு திசையின்றி பரந்த சாக்லேட் கிரேப்-ஐ ருசிக்கும் விண்வெளி வீரர்களின் சில காட்சிகளைப் பகிர்ந்து கொண்டது.
உலக சாக்லேட் தினத்தை பற்றி மேலும் சில தகவல்கள்
ஐரோப்பாவில் முதல் சாக்லேட் பார் திறக்கப்பட்டதாகக் கூறப்படும் தினத்தை நிறைவுகூறவே இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் உலக சாக்லேட் தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். உலகெங்கும் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்லேட் உட்கொள்ளப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்டெக் வார்த்தையான "xocoatl"- அதாவது காய்ச்சிய கொக்கோ பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் கசப்பான பானங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து உருவானது தான் "சாக்லேட்" என்ற பெயர். அந்த செடி மற்றும் அதன் பீன்ஸ் கோகோ என குறிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் பீன்ஸ் பதப்படுத்தப்பட்ட முடிக்கப்பட்ட தயாரிப்பையே சாக்லேட் என்று அழைக்கப்படுகிறது. மெசோஅமெரிக்கா அல்லது தற்போதைய மெக்ஸிகோவின் கொலம்பியனுக்கு முந்தைய கலாச்சாரங்கள் சாக்லேட்டின் பழமையான பதிவுகளின் ஆதாரமாக உள்ளன.