
இந்த தேதி முதல் 'ப்ளூ டிக்' நீக்கப்படும்.. எலான் மஸ்க் ட்வீட்!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார் எலான் மஸ்க்.
அவர் தலைமை செயல் அதிகாரியாகப் பதவியேற்ற பின் ட்விட்டரில் செலவுகளைக் குறைக்கவும், வருவாயைப் பெருக்கவும் அதிரடியாக செயல்பட்டார்.
செலவுகளைக் குறைக்க ட்விட்டரின் 75% பணியாளர்களை பணிநீக்கம் செய்த அவர், வருவாயைப் பெருக்க சில திட்டங்களை அறிமுகம் செய்தார்.
ட்விட்டரில் அவர் செய்த மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்று, ப்ளூ டிக் வசதியை சந்தா முறையில் கட்டண சேவையாக மாற்றியது.
கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கடைசி தேதியை தற்போது அறிவித்துள்ளார் எலான்.
ட்விட்டர்
கட்டண சேவையான 'ப்ளூ டிக்' வசதி:
ட்விட்டர் ப்ளூ வசதிக்கு கட்டணம் செலுத்தினால், வெரிஃபைடு பேட்ஜூம் சேர்த்துக் கிடைக்கும் வகையில் கட்டண முறையை அமல்படுத்தியிருந்தது ட்விட்டர்.
கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் இருந்து இந்த மாதம் ஏப்ரல் 20-ம் தேதி முதல் ப்ளூ டிக் நீக்கப்படும் என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
இந்தியாவில் ப்ளூ டிக் பெற வேண்டுமானால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் 900 ரூபாயும், வெப் பயனர்கள் 650 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த ப்ளூ டிக் வசதியுடன் ட்விட்டர் ப்ளூவுக்கு கட்டணம் செலுத்தியிருப்பவர்கள், நீண்ட ட்வீட் செய்து, பதிவிட்ட ட்வீட்டை எடிட் செய்து கொள்வது, மேலும் ட்விட்டர் இனி அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய வசதிகளை பெறுவது என பல வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.