இஸ்ரேல் செல்லும் எலான் மஸ்க்: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரங்களையும் பார்வையிடுகிறார்?
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று முதல் துவங்கியிருக்கும் நிலையில், அடுத்த வாரம் எக்ஸின் உரிமையாளரான எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேலுக்குச் செல்லும் போது, காசாவின் எல்லைப்பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட நகரங்களையும் அவர் பார்வையிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்மால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார் எலான் மஸ்க். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான பதிவுகளில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளுக்கும், காசாவின் உள்ள செஞ்சிலுவை மற்றும் கிரசன்ட் சங்கங்களுக்கும் அளிப்பதாக எக்ஸில் பதிவிட்டிருந்தார் அவர்.
எலான் மஸ்க் மீது அதிருப்தியில் பெருநிறுவனங்கள்:
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பல்வேறு வகையில் எலான் மஸ்க் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறார். ஒரு புறம் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக அவர் அறிவித்திருக்கும் நிலையில், மற்றொருபுறம் அமெரிக்காவைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் எலான் மஸ்கின் எக்ஸை புறக்கணித்து வருகின்றன. எக்ஸ் தளத்தில் யூத எதிர்ப்புக் கருத்தைப் பகிர்ந்த பயனாளர் ஒருவரின் கருத்தை ஆமோதிப்பது போல் எலான் மஸ்க் மறுமொழி அளித்ததைத் தொடர்ந்து, எக்ஸில் இனி விளம்பரம் செய்வதில்லை என அந்நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இஸ்ரேல்-ஹாமஸ் போர் குறித்த போலியான மற்றும் தவறான தகவல்கள் எக்ஸ் தளத்தில் அதிகம் பகிரப்படுவதாகவும், அவற்றைத் தடுக்க எலான் மஸ்க் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.