மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றது எலான் மஸ்கின் 'நியூராலிங்க்'!
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் (Neuralink) ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப்பைப் பொருத்தி அதன் மூலம் கணினியை இயக்கும் பிரெய்ன் இம்ப்ளான்ட் தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை அளித்திருக்கிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA). இதனை தங்கள் அதிகாப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறது நியூராலிங்க் நிறுவனம். யாரிடம் இந்த பரிசோதனை செய்யப்படவிருக்கிறது, இந்த பரிசோதனைக்கான நபர்களை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது குறித்த விபரங்கள் அந்நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை. "இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தொடுதல் இல்லாமல் நம் மூளையை வைத்தே கணினிகளைக் கட்டுப்படுத்த முடியும்" என கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நியூராலிங்க் நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கிறார் எலான் மஸ்க்.
விலங்குகளிடம் பரிசோதனை:
இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு, 2020-ம் ஆண்டிலேயே மனிதர்களிடம் பரிசோதனையைத் தொடங்குவோம் என 2019-ல் அறிவித்திருந்தார் எலான் மஸ்க். ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது தான் அனுமதியைப் பெற்றிருக்கிறது நியூராலிங்க். இதற்கு முன்னர் குரங்களின் மூளையில் சிப்பை பொருத்தி இந்த தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்திருக்கிறது அந்நிறுவனம். சிறிய நாணயத்தின் அளவுள்ள ஒரு சிப்பை குரங்குகளின் மூளையில் வைத்திருக்கின்றனர். அந்தச் சிப்பைப் பயன்படுத்தி கணினிகளில் அடிப்படை வீடியோ கேம்களை விளையாடுவது, கர்சரை இயக்குவது உள்ளிட்ட செயல்களை அந்த விலங்குகள் செய்திருக்கின்றன. இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் நமது உடலில் செயலிழந்த பாகத்தை கூட நம்மால் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.