Loading...
பணம் தேவையில்லாத புதிய உலகம் உருவாகும்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு
ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் மாற்றம் குறித்து எலான் மஸ்க் கணிப்பு

பணம் தேவையில்லாத புதிய உலகம் உருவாகும்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
04:19 pm

செய்தி முன்னோட்டம்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க், தி எகனாமிஸ்ட் இதழுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) எதிர்காலம் குறித்துப் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தால் பல ஆபத்துகள் மற்றும் அச்சங்கள் நிலவிய போதிலும், அதன் அசுர வேகத்தைத் தடுப்பது இனி சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தத் தொழில்நுட்பப் புரட்சியை எதிர்ப்பதை விட்டுவிட்டு, மக்கள் இதன் எதிர்காலத்தை ஏற்றுக்கொண்டு நகர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு அச்சம்

ஓபன்ஏஐ சோதனைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள்

எலான் மஸ்க் பேட்டி அளித்த அடுத்த நாளே, முன்னணி ஏஐ நிறுவனமான ஓபன்ஏஐ, தனது புதிய ஏஐ மாடல்களின் பாதுகாப்பு அம்சங்களை தற்காலிகமாக நீக்கி சோதித்த போது அவை எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகத் தெரிவித்தது.

இந்தத் தகவல் உலகளவில் ஏஐ பாதுகாப்பு மற்றும் அதன் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விவாதங்களை மீண்டும் சூடாக்கியுள்ளது.

இருப்பினும், ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களுக்கு இடையேயான தீவிரப் போட்டி காரணத்தால், ஏஐ தொழில்நுட்பத்தின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்றும் எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய உலகம்

10 ஆண்டுகளில் "பணம் தேவைப்படாத" புதிய உலகம்

ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்களின் அபார வளர்ச்சியால் உலகப் பொருளாதாரம் முற்றிலும் மாறும் என்று கணித்துள்ள எலான் மஸ்க், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் "பணம் என்பது முக்கியமில்லாத ஒன்றாக" மாறிவிடும் என்று கூறியுள்ளார்.

மனிதர்களின் அன்றாடத் தேவைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏஐ மற்றும் ரோபோக்கள் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் என்பதால், உலகில் பற்றாக்குறை என்பதே இல்லாமல் அளவற்ற வளம் உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எக்ஸ் தளம்

எக்ஸ் தளம் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்குப் பதில்

இந்த நேர்காணலில் ஏஐ தொழில்நுட்பம் மட்டுமன்றி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பயன்பாடு மற்றும் தன் மீதான அரசியல் விமர்சனங்கள் குறித்தும் எலான் மஸ்க் மனம் திறந்து பேசியுள்ளார்.

தன் மீது வைக்கப்படும் இனவெறி குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த அவர், தனது நிறுவனங்களில் பல்வேறு தரப்பட்ட மக்களும் திறமையின் அடிப்படையில் பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டினார்.

மேலும் குடிவரவு, மதம் மற்றும் தனது பொது பிம்பம் குறித்த பல கேள்விகளுக்கும் அவர் இந்த நேர்காணலின் போது வெளிப்படையாகப் பதிலளித்தார்.

ADVERTISEMENT

எதிர்கால உலகம்

எதிர்கால ஏஐ உலகிற்கு மனிதகுலம் தயாராக வேண்டும்

அரசாங்கங்களும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் ஏஐ கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்க முயன்றாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது என்பதே யதார்த்தம் என்று எலான் மஸ்க் முடிவாகத் தெரிவித்துள்ளார்.

ஆபத்துகள் 20 சதவீதம் வரை இருந்தாலும், மனிதகுலத்தின் உற்பத்தித் திறனையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வாய்ப்புகளே இதில் அதிகம் உள்ளதாக அவர் நம்புகிறார்.

மொத்தத்தில், ஏஐ வடிவமைக்கும் புதிய எதிர்காலத்திற்கு ஏற்ப மனிதகுலம் தங்களை வேகமாகவும் எச்சரிக்கையுடனும் மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம் என்பதே அவரது கருத்தாக உள்ளது.

ADVERTISEMENT