எக்ஸ் தளத்தில் 200 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற உலகின் முதல் நபர்; எலான் மஸ்க் சாதனை
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸில் 200 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் நபராகி குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். ட்விட்டரை எலான் மஸ்க் $44 பில்லியன் கொடுத்து கையகப்படுத்திய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சாதனை வந்துள்ளது. டிவிட்டரை கையகப்படுத்திய பிறகு அதன் பெயரை எக்ஸ் என மறுபெயரிடப்பட்டு தற்போது $10 பில்லியனுக்கும் குறைவான மதிப்பை அந்த சமூக வலைத்தளம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மஸ்க்கைப் பின்தொடர்பவர்களில் பெரும் பகுதியினர் கணக்கை பராமரிக்காதவர்கள் அல்லது போலியான கணக்குகள் என்று சில ஊடக அறிக்கைகள் கூறினாலும், அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒப்பிடமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது.
எக்ஸ் தளத்தில் செல்வாக்கு மிக்க நபர்கள்
எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் அதிக பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், 131.9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த இடத்தில் உள்ளார். போர்த்துகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 113.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஒபாமாவுக்கு அடுத்து உள்ள நிலையில், கனேடிய பாடகர் ஜஸ்டின் பீபர் மற்றும் பார்பாடியன் கலைஞர் ரிஹானா முறையே 110.3 மில்லியன் மற்றும் 108.4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உலக அளவில் 102.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளார்.
எக்ஸ் தளத்தின் பயனர் ஈடுபாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் தரவு, எக்ஸ் தளத்தில் தினசரி பயனாளர் எண்ணிக்கை இரண்டாவது ஆண்டுக்கு ஆண்டு 12% அதிகரித்து 363.6 பில்லியனாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இயங்குதளம் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 2% அதிகரித்து 547.9 மில்லியனை எட்டியது. கூடுதலாக, தினசரி வீடியோ பார்வைகள் ஆண்டுக்கு ஆண்டு 43% கணிசமான அதிகரிப்பைப் பெற்று 8.9 பில்லியன் பார்வைகளை எட்டியது. எக்ஸ் தளத்தை எல்லாவற்றுக்கும் ஏற்ற ஒரு செயலியாக மாற்றுவதை எண்ணுவதாக எலான் மஸ்க் முன்பு கூறியிருந்தார். இதன்மூலம், பயனர்கள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைப் பதிவேற்ற மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும் வகையிலான அம்சங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.