நாளை பூமியைத் தாக்கும் சூரிய புயல்; அரோரா ஒளிரும்; இந்தியாவிற்கு பாதிப்பா?
செய்தி முன்னோட்டம்
சூரியனில் ஏற்பட்ட இரு பெரும் பிளாஸ்மா வெடிப்புகள் காரணமாக உருவாகியுள்ள சக்திவாய்ந்த சூரிய காந்தப்புயல், நாளை (அக்டோபர் 11) பூமியைத் தாக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமியின் காந்தப்புலத்தில் மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறி அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) G2 அளவிலான மிதமான எச்சரிக்கையை அதிகாரப்பூர்வமாக விடுத்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
எப்படி உருவாகிறது?
சூரிய புயல் என்றால் என்ன?
சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் ஆற்றல்மிக்க வெடிப்புகளால் மின்சாரம் கொண்ட பிளாஸ்மா துகள்களும், காந்தப்புல பொருட்களும் பெருமளவில் விண்வெளியில் உமிழப்படுகின்றன.
இவை கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த விண்வெளிப் பொருட்கள் பூமியை வந்தடையும் போது, நமது கிரகத்தின் காந்த மண்டலத்தைக் கிளறி காந்தப்புயலை உண்டாக்குகின்றன.
இவை தீவிரத்தைப் பொறுத்து G1 முதல் G5 வரை வகைப்படுத்தப்படுகின்றன.
பாதிப்புகள்
தொழில்நுட்பப் பாதிப்புகள் மற்றும் வண்ணமயமான அரோரா
அக்டோபர் 7 மற்றும் 8 தேதிகளில் சூரியனில் இருந்து கிளம்பிய இரு வெடிப்புகள் ஒன்று சேர்ந்து பூமியை நோக்கி வருகின்றன.
இதன் காரணமாக உயர் அட்சரேகை நாடுகளில் மின்சார அமைப்புகளில் லேசான மின்னழுத்த மாறுபாடுகள் ஏற்படலாம்.
மேலும் ரேடியோ அலைவரிசைகள் மற்றும் ஜிபிஎஸ் செயற்கைக்கோள் சமிக்ஞைகளில் சிறிய தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும், துருவப் பகுதிகளைத் தாண்டி பிற வடநாட்டு வானிலும் அழகிய அரோரா ஒளிக்காட்சிகள் தோன்றும்.
இந்தியா
இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுமா?
தற்போது விடுக்கப்பட்டுள்ள G2 வகை எச்சரிக்கையானது மிதமான அளவிலேயே இருப்பதால், இந்தியாவிற்கு எந்தவொரு நேரடிப் பாதிப்பும் ஏற்படாது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்படவோ அல்லது மின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படவோ வாய்ப்பில்லை.
அதேபோல் இந்திய வானில் அரோரா ஒளிக்காட்சிகளைக் காண முடியாது.
இருப்பினும் விண்வெளி வானிலை நிலையங்கள் பூமியை நோக்கி வரும் துகள்களின் வேகத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.