கணினி செயலிழப்பிற்கு நாங்கள் காரணமல்ல; குற்றச்சாட்டிற்கு கிரவுட்ஸ்ட்ரைக் மறுப்பு
கடந்த ஜூலை மாதத்தில் உலகளாவிய கணினி செயலிழப்பால் ஏற்பட்ட விரிவான விமான இடையூறுகளுக்கு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக் தான் காரணம் என டெல்டா ஏர்லைன்ஸ் முன்வைத்த குற்றச்சாட்டை கிரவுட்ஸ்ட்ரைக் மறுத்துள்ளது. முன்னதாக கிரவுட்ஸ்ட்ரைக் வெளியிட்ட தவறான மென்பொருள் அப்டேட்டால் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக அந்த மென்பொருளை பயன்படுத்திய டெல்டா ஏர்லைன்ஸ் உட்பட, உலகளவில் மில்லியன் கணக்கான கணினிகளை பாதித்தது. இதனால் ஆயிரக்கணக்கான டெல்டா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் குற்றச்சாட்டு குறித்து டெல்டா ஏர்லைன்சிற்கு எழுதிய கடிதத்தில், கிரவுட்ஸ்ட்ரைக் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது மற்றும் தங்கள் நிறுவனம் குறித்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளது.
கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க டெல்டா ஏர்லைன்ஸ் திட்டம்
சிஸ்டம் செயலிழப்பைத் தொடர்ந்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு உதவ பல முறை முன்வந்தும் அதற்கு டெல்டா ஏர்லைன்ஸ் பதிலளிக்கவில்லை என்று கிரவுட்ஸ்ட்ரைக் விமர்சித்துள்ளது. கிரவுட்ஸ்ட்ரைக்கின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் கர்ட்ஸ் தனிப்பட்ட முறையில் டெல்டாவின் சிஇஓ எட் பாஸ்டியனை அணுகியதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கணினி செயலிழப்பால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக பாஸ்டியன் கூறியுள்ளார். ஆனால், கிரவுட்ஸ்ட்ரைக் தனது ஒப்பந்தங்களின் விதிமுறைகளின்படி, நிறுவனத்தின் பொறுப்பு ஒற்றை இலக்க மில்லியன்களில் உள்ள தொகைக்கு மட்டுமே என்று தெளிவுபடுத்தியது.