2027 முதல் விண்வெளி சுற்றுலா; டிக்கெட் விற்பனையை தொடங்கிய சீன நிறுவனம்
ஒரு சீன நிறுவனம் 2027இல் வணிக விண்வெளிப் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இதில் பயணிப்பதற்காக இரண்டு டிக்கெட்டுகளின் விற்பனையை வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கியுள்ளது. டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் விற்கப்படும் டிக்கெட்டுகளின் விலை 1.5 மில்லியன் யுவான் ($211,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக தயாரிக்கப்படும் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்று, ஐந்து நிமிடங்கள் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையை பயணிகள் அனுபவிக்க முடியும். ஒரு விண்கலத்தில் இரண்டு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி மாலை 6:00 மணிக்கு விற்பனைக்கு வரும் இந்த வாரம் வி சாட் கணக்கு மூலம் டீப் ப்ளூ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
50,000 யுவன் செலுத்தி முன்பதிவு
பயணிகள் தங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது 50,000 யுவான்களை டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் சீனாவின் வளர்ந்து வரும் வணிக விண்வெளித் துறையில் முன்னணியில் உள்ளது. இது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் என சீனா நம்புகிறது. டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ், செலவைக் குறைக்க மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. முன்னதாக, கடந்த மே மாதம், சிஏஎஸ் ஸ்பேஸ் 2028 இல் சீனாவில் விண்வெளி சுற்றுலா சேவையை தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சீனா அரசும் 2030ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு ஒரு குழுவை அனுப்பத் திட்டமிட்டு, இறுதியில் அங்கு ஒரு தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.