நாசாவுக்கு முன்பாக செவ்வாய் கிரக மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர திட்டமிடும் சீனா
2033-ம் ஆண்டு செயல்படுத்தப்படவிருக்கும் விண்வெளித் திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து வரத் திட்டமிட்டிருக்கிறது நாசா. ஆனால், அதற்கு முன்னதாக 2028-ம் ஆண்டே செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் விண்வெளித் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது சீனா. செவ்வாய் கிரகத்தை மையப்பசடுத்தி 2028-ம் ஆண்டே இரண்டு திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது சீனா, அவற்றில் ஒரு திட்டத்தின் முலம் அந்த ஆண்டே செவ்வாய் கிரக மாதிரிகளை சேகரித்து, 2031ம் ஆண்டு அதனை பூமிக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது அந்நாடு. தங்களுடைய டியான்வென்-3 (Tianwen-3) திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய் கிரக மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வரவிருக்கிறது சீனா.
சீனாவின் முன்னிருக்கும் சவால்கள்:
இந்தத் டியான்வென்-3 திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரக மாதிரிகளை வெற்றிகரமாக பூமிக்கு எடுத்து வர, அக்கிரகத்தின் வலிமண்டல செயல்பாடு குறித்த புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. முன்னதாக, செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மணற்புயலால் ஆப்பர்ட்யூனிட்டி, இன்சைட் மற்றும் ஷூராங் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இணைப்பை இழந்திருக்கின்றன நாசாவும், சீன விண்வெளி ஆய்வு நிறுவனமும். எனவே, செவ்வாய் கிரகத்தின் வலிமண்டலத்தை பிரதிபலிக்கும் வகையிலான எண் சார்ந்த கணனி மாதிரியான 'கோமார்ஸை' (GoMars) உருவாக்கியிருக்கிறது சீனா. இந்தத் திட்டத்திற்கான விண்வெளி உபகரணங்களைத் உருவாக்குவதில் இருந்து, தரையிறக்கத்திற்கான இடத்தை தேர்வு செய்வது வரை அனைத்திற்கும் கோமார்ஸின் தகவல்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது சீனா.