220 கோடி நிதி திரட்டி சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் (Agnikul), முதலீட்டாளர்களிடமிருந்து 26.7 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 222 கோடி ரூபாய்) நிதியை திரட்டியிருக்கிறது. பாரம்பரியமான ராக்கெட் தயாரிப்பு முறையை கைவிட்டுவிட்டு, 3D பிரிண்டிங் முறையில் ராக்கெட்டுகளை உருவாக்கி, அதனை வெற்றிகரமாக சோதனையும் செய்திருக்கிறது அக்னிகுல். 2021ம் ஆண்டு 3D பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்ட அக்னிலெட் என்ற ராக்கெட் இன்ஜினைக் கொண்டு, அக்னிபான் என்ற 3D பிரிண்டிங் ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்திருக்கிறது இந்த சிறிய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம். 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது, ஒரு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து பாகங்களையும் 3D பிரிண்டிங் முறையிலேயே உருவாக்கி, ராக்கெட் உருவாக்கத்தில் புதுமையைப் புகுத்தியிருக்கிறது.
முன்னணியில் அக்னிகுல்:
2020ம் ஆண்டே இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டிருக்கிறது இந்த அக்னிகுல். 300 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவுக்கு உதவவிருக்கிறது இந்நிறுவனம். இவற்றையெல்லாம் தொடர்ந்து, கடந்த ஆண்டு சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் தனியாக் ஏவுதளம் ஒன்றையும், மிஷன் கண்ட்ரோல் மையம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறது இந்த அக்னிகுல். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் லேப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகிறது அக்னிகுல். எனினும், விண்ணில் ஏவப்படும் செயற்கைகோளுக்கு ஏற்ப பிரத்தியேகமான ராக்கெட்டுகளை வடிவமைக்கும் திறனைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம், போட்டி நிறுவனங்களை விட ஒருபடி மேலே இருக்கிறது.
அக்னிகுல்லின் விரிவாக்கத் திட்டங்கள்:
நகரும் ஏவுதளங்களிலிருந்தும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட்டுகள் மற்றும் மறுபயன்பாடு செய்யக்கூடிய வகையிலான ராக்கெட்டுகளையும் தாங்கள் உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் துணை-நிறுவனரும், சிஇஓவுமான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன். தற்போது 225 நபர்கள் வரை அக்னிகுல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அந்நிறுவனம் திரட்டியிருக்கும் நிதியுடன், தங்களது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது அக்னிகுல். இந்த 2023ம் ஆண்டு இறுதிக்குள் தங்களுடைய ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்து காட்ட திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஐரோப்பா மற்றும் ஜப்பானை சேர்ந்த சில நிறுவனங்கள் கூட அக்னிகுல்லின் சேவையைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. முழுமையாக ராக்கெட்டுகளை செலுத்தத் தொடங்கிய பின்பு மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு ஏவல்களை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அக்னிகுல்.