கூகுள் I/O நிகழ்வு.. அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் 'பார்டு சாட்பாட்'டை வெளியிட்டது கூகுள்!
தங்களின் வருடாந்திர I/O நிகழ்வில், தாங்கள் மேம்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் AI கருவிகள் குறித்த பல முக்கிய அறிவிப்புகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டது கூகுள். அதில் முக்கியமானது பார்டு AI குறித்த அப்டேட். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் பார்டு AI சாட்பாட்டை வெளியிட்டிருந்தது கூகுள். தற்போது இந்தியா உட்பட 180 நாடுகளில் உள்ள பயனர்களுக்கும் பார்டு AI சாட்பாட்டை வெளியிட்டிருக்கிறது கூகுள். இணையத்தில் AI புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடிக்குப் நேரடிப் போட்டியாளராக பார்டு AI கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. bard.google.com என்ற இணையதளத்திற்கு சென்று பார்டு AI-யை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்டு AI vs சாட்ஜிபிடி.. என்ன வித்தியாசம்?
கூகுளின் பார்டு மற்றும் ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடி இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் அதன் தகவல் தளம் தான். சாட்ஜிபிடியானது 2021 செப்டம்பர் வரையிலான தகவல்களுக்கு மட்டுமே விடையளிக்கும். அந்த அளவிற்கான தகவல்களைக் கொண்டே அது பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கூகுள் பார்டு AI-யானது நிகழ்நேரத் தகவல்கள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் திறனுடையதாக இருக்கிறது. பார்டு சாட்பாட்டை அனைவரது பயன்பாட்டிற்கும் வெளியிட்டாலும், அது இன்னும் சோதனைக் கட்டத்திலேயே தான் இருக்கிறது, பார்டு அளிக்கும் தகவல்கள் துல்லியமற்றதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அது அளிக்கும் தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்து கொள்ளுங்கள் என குறிப்பிடுகிறது கூகுள்.