ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம்.. ஓபன்ஏஐ சிஇஓ கருத்து!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கான சட்டங்களை உலகில் முதன்முதலாக முதலாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய சட்டமானது நிறைவேறுவதன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன். "ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய சட்டவரைவு அதீத கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், அதில் சில மாற்றங்களை அவர்கள் செய்யவிருப்பதாக கேள்விப்படுகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார். புதிய சட்டங்களை பொதுப் பயன்பாடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியிருக்கின்றன. அதில் பொதுப் பயன்பாடு என்றால் என்ன என்பது குறித்த விளக்கத்தை மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் ஆல்ட்மேன்.
புதிய AI சட்டம்:
தற்போதைய சட்ட வரைவில், ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிறுவனங்கள் முதலில் அதன் உருவாக்கத்திற்கு காப்புரிமை பெற்ற பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறதா என்பது குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தவிருக்கும் சட்டத்திற்கு உடன்பட முதலில் முயற்சி செய்வோம். ஆனால், அதற்கு உடன்பட முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவோம், எனவும் தெரிவித்திருக்கிறார் சாம் ஆல்ட்மேன். AI தொழில்நுட்பங்களுக்கான சட்டத்தை எந்த வகையில் அணுகுவது என்பது குறித்து அமெரிக்கா யோசித்து வரும் நிலையில், புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவே ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிவிட்டது குறிப்பிடத்தக்கது.