வாட்ஸ்அப்பில் இனி AI ஸ்டிக்கர்கள் கலக்கப்போகுது! சாட்ஜிபிடியின் புதிய அப்டேட்; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம், சாட்ஜிபிடி செயலி மூலம் உருவாக்கப்படும் ஏஐ படங்களை நேரடியாக வாட்ஸ்அப்பிற்கு எக்ஸ்போர்ட் செய்யும் புதிய வசதியை உருவாக்கி வருகிறது. தற்போது வாட்ஸ்அப்பில் மெட்டா ஏஐ மூலம் ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதி உள்ள நிலையில், சாட்ஜிபிடி பயனர்களும் தங்களின் சொந்த விருப்பத்திற்கேற்ப மீம்கள் மற்றும் வரைபடங்களை உருவாக்கி, அவற்றை வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்குகளாக மாற்றும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஆண்ட்ராய்டு செயலி
ஆன்ட்ராய்டு செயலியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள்
ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி நடத்திய ஏபிகே சோதனையில், சாட்ஜிபிடியின் புதிய ஆன்ட்ராய்டு செயலி பதிப்பில் இதற்கான ரகசியக் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் 'ChatGPT Stickers', 'Add to WhatsApp', 'Download stickers' மற்றும் 'WhatsApp (3 minimum)' போன்ற முக்கியமான ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் பயனர்கள் இனி மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது போட்டோ எடிட்டர்களின் உதவியின்றி, ஒரே கிளிக்கில் சாட்ஜிபிடியிலிருந்து வாட்ஸ்அப்பிற்கு சொந்த ஸ்டிக்கர் பேக்குகளை நேரடியாக அனுப்ப முடியும்.
செயல்பாடு
வாட்ஸ்அப் விதியும் புதிய வசதியின் செயல்பாடும்
வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விதிகளின்படி, ஒரு புதிய ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கக் குறைந்தபட்சம் 3 ஸ்டிக்கர்களாவது தேவைப்படும்.
அதனால் பயனர்கள் சாட்ஜிபிடியில் குறைந்தது மூன்று ஏஐ படங்களை உருவாக்கிய பிறகே அவற்றை வாட்ஸ்அப்பில் சேர்க்க முடியும்.
மேலும், 'Add to chat apps' என்ற பொதுவான குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற பிற குறுஞ்செய்தி செயலிகளுக்கும் இந்த வசதியை ஓபன்ஏஐ நிறுவனம் விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாட்டிங்
எளிமையாகும் வாட்ஸ்அப் சாட்டிங் அனுபவம்
தற்போது சாட்ஜிபிடி மூலம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் உருவாக்க படத்தைப் பதிவிறக்கி, அதன் பின்னணியை நீக்கி, கிராப் செய்து தனியாக இம்போர்ட் செய்யும் கடினமான நடைமுறை உள்ளது.
ஆனால் இந்த புதிய 'ChatGPT Stickers' அம்சம் நேரடியாக ஆண்ட்ராய்டு சிஸ்டம் மூலம் செயல்படுவதால், சிரமமற்ற முறையில் சில நொடிகளில் ஸ்டிக்கர்களை உருவாக்க முடியும்.
தற்போது இந்த அம்சம் உருவாக்கக் கட்டத்தில் இருப்பதால், விரைவில் சாட்ஜிபிடியின் பீட்டா பதிப்பில் சோதனைக்காகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.