பொய்யான, தவறான தகவல்கள் மற்றும் செய்திகளை வடிகட்ட முடியாத AI சாட்பாட்கள்
செயற்கை நுண்ணறிவு சாட்பாட் போட்டியில் முன்னணியில் இருக்கும் இரண்டு கருவிகளான ஓபன்ஏஐ-யின் சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் பார்டு ஆகிய இரண்டு சாட்பாட்களும், பொய்யான அல்லது தவறான தகவல்களை உருவாக்கிக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது நியூஸ் கார்டு (News Guard) நிறுவனம். செய்தி மற்றும் தகவல் வலைத்தளங்களுக்கான ரேட்டிங் அளிக்கும் நிறுவனமான நியூஸ் கார்டு, கடந்த மார்ச் மாதமும், சாட்ஜிபிடி மற்றும் பார்டு ஆகிய சாட் பாட்களை பொய்யான தகவல்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்டு சோதனை செய்திருந்தது. அதே போல், தற்போது பொய்யான மற்றும் தவறான தகவல்கள் தொடர்பான 100 கேள்விகளை இரண்டு சாட்பாட்களிடமும் கேட்டு அது எந்த அளவிற்கு சரியான தகவல்களை வழங்குகிறது என சோதனை செய்திருக்கிறது.
தோல்வியடைந்த AI சாட்பாட்கள்:
நியூஸ் கார்டு நிறுவனம் கேட்ட 100 கேள்விகளில் 98 கேள்விகளுக்கு தவறான மற்றும் பொய்யான பதில்களை அளித்திருக்கிறது சாட்ஜிபிடி, அதே போல பார்டும் 80 கேள்விகளுக்கு பொய்யான அல்லது தவறான பதில்களையே அளித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்ட சோதனையின் போது, சாட்ஜிபிடி 100 கேள்விகளுக்கும், பார்டு 76 கேள்விகளுக்கும் பொய்யான மற்றும் தவறான தகவல்களை உருவாக்கிக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கடந்த ஆறு மாதங்களில், பொய்யான தகவல்களை கண்டறிந்து வடிகட்டி பயனாளர்களுக்கு வழங்கும் வகையில் தங்கள் ஏஐ சாட்பாட்களை அந்த நிறுவனங்கள் மேம்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது நியூஸ் கார்டு.