சந்திராயன் 3: நிலவில் ஆராய்ச்சியை தொடங்கியது ChaSTE
சந்திராயன் 3 விண்கலத்துடன் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திர மேற்பரப்பு தெர்மோபிசிகல் பரிசோதனை கருவி(ChaSTE), நிலவில் ஆராய்ச்சியை தொடங்கியதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது. மேலும், அந்த கருவி தனது முதல் அவதானிப்புகளை இஸ்ரோவுடன் பகிர்ந்துள்ளது. பல்வேறு ஆழங்களில் இருந்து நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை அந்த கருவி அளந்து இஸ்ரோவுக்கு ஒரு வரைபடமாக அனுப்பியுள்ளது. சந்திர மேற்பரப்பு தெர்மோபிசிகல் பரிசோதனை(ChaSTE) கருவி என்பது சந்திர மேற்பரப்பின் வெப்பநிலைகளை புரிந்து கொள்ள தென் துருவத்தைச் சுற்றியுள்ள இடங்களில் வெப்பநிலைகளை அளக்கும் ஒரு கருவியாகும். நிலவின் மேற்பரப்பை தோண்டி அதன் வெப்பநிலையை அளக்கும் தொழில்நுட்பம் ChaSTEஇல் பொருத்தப்பட்டுள்ளது. இது 10 CM ஆழம் வரை தோண்ட வல்லது. அதனுடன் 10 வெப்பநிலை உணரிகளும் ChaSTEஇல் பொருத்தப்பட்டுள்ளன.
"சந்திரயான் -3இன் லேண்டர் மற்றும் ரோவர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது"
சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விண்கலத்தின் ஐந்து கருவிகளும் இயக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோவின் தலைவர் எஸ் சோமநாத் இன்று காலை கூறியிருந்தார். அனைத்து சோதனைகளும் செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, விண்வெளி ஆய்வில் இந்தியா வரலாறு படைத்தது. தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, விக்ரம் லேண்டருக்கும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கும் இடையே தகவல் தொடர்பு பாதை நிறுவப்பட்டது. அதனையடுத்து, சந்திரயான் -3யின் விக்ரம் லேண்டர் நிலவின் தரவுகளையும் வீடியோக்களையும் இஸ்ரோவுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது.