நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கவிருக்கும் சந்திரயான் 3
கடந்த ஜூலை 14-ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ. இந்த விண்கலம் நிலவை சென்று அடைவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என தெரிவித்திருந்தது இஸ்ரோ. நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து வெறியேற கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுற்று வட்டப்பாதையின் தூரத்தை அதிகரித்துக் கொண்டே வந்தது இஸ்ரோ. கடந்த நாட்களில், நான்கு முறை இந்த சுற்று வட்டப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்ட நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி சுற்று வட்டப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையை இன்று வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ.
நிலவை நோக்கிய பயணத்தில் சந்திரயான் 3:
இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பி, சந்திரயான் 3 நிலவை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து ஆகஸ்ட் முதல் நாளில் சந்தியரயான் 3 விண்கலமானது நிலவின் புவியீர்ப்பு விசையில் இணைந்து பயணிக்கத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு, நிலவைச் சுற்றிய சந்திரயானின் 3-யின் சுற்றுவட்டப்பாதையானது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 24 அல்லது 25-ல் நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது திட்டமிட்டிருக்கும் அந்தத் தேதிகளில் தரையிறங்க வேண்டிய இடத்தில் பகல் நேரமாக இல்லாத பட்சத்தில், தரையிறங்கும் தேதியை செப்டம்பருக்குத் தள்ளி வைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.