LOADING...
3 மணி நேரத்தில் நீக்க வேண்டும்: AI மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கு இந்தியா அதிரடி தடை
புதிய விதிகள் வரும் பிப்ரவரி 20, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன

3 மணி நேரத்தில் நீக்க வேண்டும்: AI மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கு இந்தியா அதிரடி தடை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 10, 2026
07:16 pm

செய்தி முன்னோட்டம்

இணையதளங்களில் பரவி வரும் போலி செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த இந்திய அரசு இன்று (பிப்ரவரி 10) தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் அதிரடியான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிகள் வரும் பிப்ரவரி 20, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. புதிய விதிகளின்படி, நீதிமன்றம் அல்லது அரசு அமைப்புகளால் சட்டவிரோதமானது என கண்டறியப்படும் AI உள்ளடக்கங்களை, சமூக வலைதள நிறுவனங்கள் (X, Instagram, Facebook போன்றவை) நோட்டீஸ் கிடைத்த 3 மணி நேரத்திற்குள் தங்களது தளத்திலிருந்து நீக்க வேண்டும். முன்னதாக இதற்கு 36 மணி நேரம் வரை அவகாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விதிகள்

முக்கிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்

AI-மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட அனைத்து ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படங்களிலும் இது AI-ஆல் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிடும் லேபிள்களைப் பொருத்த வேண்டும். பயனர்கள் ஏதேனும் ஒரு கோப்பை பதிவேற்றம் செய்யும்போது, அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதனை சரிபார்க்க தளங்கள் தானியங்கி மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஏஐ உள்ளடக்கங்களின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப தரவுகளை அழிக்கவோ அல்லது மாற்றவோ கூடாது. இதன் மூலம் அந்த வீடியோ எங்கிருந்து உருவானது என்பதை எளிதாக கண்டறிய முடியும். குழந்தைகள் தொடர்பான பாலியல் சித்திரங்கள், போலி ஆவணங்கள் அல்லது ஒருவரை போல மற்றவர் நடித்து ஏமாற்றும் டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்கினால், அவை BNS சட்டத்தின் கீழ் கடும் குற்றமாகப் பதியப்படும்.

விதிவிலக்கு

கல்வி சார்ந்த வீடியோக்களுக்கு விதிவிலக்கு

சாதாரண வீடியோ எடிட்டிங், ஒலிக் குறைப்பு (Noise reduction) மற்றும் கல்வி சார்ந்த வடிவமைப்புகளுக்கு இந்த விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இணையவழி மோசடிகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தெரிவித்துள்ளது.

Advertisement