டிஜிட்டல் இந்தியாவின் மெகா ஜாக்பாட்; 2047 வரை டேட்டா சென்டர்களுக்கு வரி இல்லை; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் 2026 இல் இந்தியாவை உலகின் டிஜிட்டல் தரவு மையமாக (Global Data Hub) மாற்றும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் தரவு மையங்களை (Data Centres) அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரிச் சலுகை (Tax Holiday) வழங்கப்படும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், தரவுகளைச் சேமிக்கவும் செயலாக்கவும் மிகப்பெரிய அளவிலான கம்ப்யூட்டிங் பவர் தேவைப்படுகிறது.
நோக்கம்
வரி விலக்கின் நோக்கம்
கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான் போன்ற உலகளாவிய ஜாம்பவான்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய இந்த வரி விலக்கு ஊக்கமளிக்கும். இந்தியர்களின் தரவுகள் இந்தியாவிற்குள்ளேயே சேமிக்கப்படுவதை (Data Localisation) இது உறுதி செய்யும். மலிவான கிளவுட் சேவைகள் கிடைப்பதன் மூலம், இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழில்கள் (எம்எஸ்எம்இக்கள்) எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இந்த 20 ஆண்டு கால வரிச் சலுகையைப் பெற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளவுட் சேவைகளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போது, ஒரு இந்திய மறுவிற்பனையாளர் நிறுவனம் மூலமாகவே வழங்க வேண்டும். தரவு மைய சேவைகளை வழங்கும் நிறுவனம், தொடர்புடைய இந்திய நிறுவனமாக இருந்தால், அடக்க விலையில் 15 சதவீத பாதுகாப்பான லாப வரம்பு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
டேட்டா சென்டர்
இந்திய டேட்டா சென்டர் சந்தையின் வளர்ச்சி
இந்தியாவின் தரவு மையச் சந்தை தற்போது 10 பில்லியன் டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 இன் இறுதியில் 1.5 GW ஆக இருக்கும் இந்தியாவின் டேட்டா சென்டர் திறன், 2030 க்குள் 8 GW ஆக உயரும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கணிக்கிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) $6.5 பில்லியன், மைக்ரோசாஃப்ட் $17.5 பில்லியன் மற்றும் கூகுள் $15 பில்லியன் என மிகப்பெரிய முதலீடுகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்தத் துறையின் வளர்ச்சியால் கட்டுமானம், நெட்வொர்க்கிங் மற்றும் ஐடி மேலாண்மை பிரிவுகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.