2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வாட்ஸ்அப் வசதிகள்
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி சேவைத் தளமான வாட்ஸ்அப்பில் இந்த 2023ம் ஆண்டு பல்வேறு புதிய வசதிகளையும் மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்தியது மெட்டா. அப்படி புதிதாக வாட்ஸ்அப்பில் வெளியான வசதிகளின் தொகுப்பு இது. இந்த ஆண்டு வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதிகளில் முக்கியமானது, பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு என்ற வசதி தான். இதன் மூலம், இரண்டு மூன்று ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களும், அனைத்து சாதனங்களிலும் தங்களது வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த முடிகிறது. இரண்டாவது, நாம் அனுப்பிய குறுஞ்செய்திகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடிட் செய்து கொள்ளும் வசதி. இந்த வசதியும் பல சமயங்களில் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதிகள்:
வாட்ஸ்அப் மூலம் புகைப்படங்களை பகிரும் போது, அவற்றில் தரத்தை வாட்ஸ்அப் தளம் தானாகவே குறைத்து விடும். ஆனால், அப்படி தரம் குறைவாக இல்லாமல் உயர்தரத்திலான புகைப்படங்களை அனுப்பவும் இந்த ஆண்டு புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது வாட்ஸ்அப். இந்த ஆண்டு வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய வசதியானது சேனல்ஸ். வாட்ஸ்அப்பை ஒரு குறுஞ்செய்தி சேவைத் தளத்திலிருந்து, சமூக வலைத்தளமாக உருமாற்றிய ஒரு வசதி இது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தங்களது பிற சேவைகளைப் போல வாட்ஸ்அப்பிலும் இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது மெட்டா. வாட்ஸ்அப் பயனாளர்களின் தரவுகள் மற்றும் தனியுரிமைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புதிய தனியுரிமைக் கொள்கை வசதிகளை வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தியது மெட்டா.