
யுபிஐ பேமெண்ட் செய்வதில் அடிக்கடி சிக்கல் வருகிறதா? பேக்கப் யுபிஐ ஐடியை இப்பவே உருவாக்குங்க
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பேமெண்ட் சேவை முதுகெலும்பாக விளங்குகிறது. எனினும், தவறான விவரங்கள், தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது நெட்வொர்க் சிக்கல்கள் காரணமாக, தினசரி கோடிக்கணக்கான பயனர்களுக்குப் பேமெண்ட் தோல்விகள் ஏற்படுவது சாதாரணமாக உள்ளது. இத்தகைய நேரங்களில், ஒரு பேக்கப் யுபிஐ ஐடி வைத்திருப்பது முக்கியமான தீர்வாக உள்ளது. பேக்கப் யுபிஐ ஐடி என்பது உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட கூடுதல் யுபிஐ முகவரி ஆகும். ஒரு முதன்மை யுபிஐ ஐடியைப் பயன்படுத்திப் பரிவர்த்தனை செய்யும்போது அது தோல்வியடைந்தால், சிஸ்டம் தானாகவே இந்தப் பேக்கப் ஐடி மூலம் பணம் செலுத்துவதைத் தொடர முயற்சிக்கும்.
முக்கியம்
பேக்கப் யுபிஐ ஐடி ஏன் முக்கியம்
உதாரணமாக, உங்கள் முதன்மை யுபிஐ ஐடி 123@upi தோல்வியடைந்தால், அது நீங்கள் மீண்டும் முயற்சிக்காமலேயே xyz123@upi போன்ற உங்கள் பேக்கப் ஐடி மூலம் பணத்தை அனுப்ப வழிவகுக்கும். வங்கியின் தற்காலிக சர்வர் முடக்கம் அல்லது யுபிஐ நெட்வொர்க்கில் உள்ள தொழில்நுட்பப் பிழைகள் காரணமாகப் பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தோல்விகளைக் குறைக்க இது உதவுகிறது. போன்பே, பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட பெரும்பாலான யுபிஐ செயலிகளில் பேக்கப் ஐடியை உருவாக்குவது எளிது. உங்கள் யுபிஐ செயலியின் செட்டிங்ஸ் (Settings) அல்லது யுபிஐ ப்ரொஃபைல் பகுதிக்குச் சென்று, பேக்கப் யுபிஐ ஐடியைச் சேர் (Add Backup UPI ID) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, மாற்று ஐடியை உருவாக்கி அதை உங்கள் கணக்குடன் இணைக்கலாம்.