வெறும் மோதல் மட்டும் காரணமில்லை! டைனோசர்களை மொத்தமாக அழித்த விண்கல்; பூமியை தணல் அடுப்பாக மாற்றிய அதிர்ச்சிப் பின்னணி
செய்தி முன்னோட்டம்
சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய ராட்சத விண்கல் மோதலால் மட்டுமே டைனோசர்கள் அழியவில்லை என்றும், அந்த மோதலால் பூமி முழுவதும் சூழ்ந்த அடர்ந்த தூசுப் படலம் புவியைப் பிரஷர் குக்கர் போல மாற்றியதே அவை ஒட்டுமொத்தமாக அழிந்ததற்குக் காரணம் என்றும் புதிய அறிவியல் ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்தத் தீவிர ஆய்வின் முடிவுகள் 'ஜர்னல் ஆஃப் ஜியோபிசிகல் ரிசர்ச்: பயோஜியோசயின்சஸ்' இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
விண்கல்
1,000 கன கிலோமீட்டர் பாறைகளை ஆவியாக்கிய விண்கல்
தற்போதைய மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்திற்கு அருகே உள்ள சிக்சுலுப் என்ற பகுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் அளவிற்கு இருந்த மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதியது.
இந்த பிரம்மாண்ட மோதலின் போது சுமார் 1,000 கன கிலோமீட்டருக்கும் அதிகமான பாறைகளும் இடிபாடுகளும் நொடிப்பொழுதில் ஆவியாகி வளிமண்டலத்திற்கு மேல் நோக்கிப் பெருக்கெடுத்து உயர்ந்தன.
இதில் பெரிய துகள்கள் மீண்டும் பூமியின் மீது உருகிய பாறைத் துளிகளாக மழை போல் பொழிந்தாலும், மிக நுண்மையான தூசுத் துகள்கள் வளிமண்டலத்திலேயே மிதந்து ஒட்டுமொத்தப் பூமியையும் ஒரு ராட்சத போர்வை போல மூடிக்கொண்டன.
தூசுப் போர்வை
பூமியை மூடிய அடர்ந்த தூசுப் போர்வை
பூமியைச் சூழ்ந்த இந்த நுண்மையான தூசுப் படலம், பாத்திரத்தின் மீது போடப்பட்ட மூடியைப் போல செயல்பட்டு புவியின் மேற்பரப்பில் இருந்த வெப்பம் வெளியேயற முடியாமல் உள்ளேயே தடுத்து நிறுத்தியது.
பர்டியூ பல்கலைக்கழகத்தின் புவி மற்றும் வளிமண்டல அறிவியல் உதவிப் பேராசிரியர் அலிக்சாண்ட்ரியா ஜான்சன் கூறுகையில், "இந்தத் தூசு மேகப் படலம் பூமியின் மேற்பரப்பில் இருந்து உருவான அனைத்து வெப்பத்தையும் உள்ளேயே சிறைபிடித்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த தூசுப் படலம் மட்டும் உருவாகாமல் இருந்திருந்தால் இது ஒரு பிராந்திய அளவிலான பேரழிவாக மட்டுமே முடிந்திருக்கும் என்றும், உலகளாவிய பேரழிவாக மாறியிருக்காது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெப்ப கதிர்வீச்சு
மனித உயிருக்கு 17 மடங்கு ஆபத்தான வெப்ப கதிர்வீச்சு
இந்த வெப்பப் பொறி காரணமாகப் பூமியின் மேற்பரப்பில் இருந்த விலங்குகள், மனித உயிருக்கு 100 சதவீதம் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்ப கதிர்வீச்சை விட 17 மடங்கு அதிகமான வெப்பத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டன.
இந்த மிதமிஞ்சிய வெப்பத்தால் புல்வெளிகள், மரங்கள் மற்றும் காடுகள் அனைத்தும் தன்னிச்சையாகத் தீப்பற்றி எரிந்து உலகம் முழுவதும் காட்டுத் தீ பரவியது.
சூரிய ஒளியை முற்றிலும் மறைத்த தூசுப் படலத்தால் பூமி இருளில் மூழ்கியதுடன், சுழன்றடித்த காட்டுத்தீயின் பிரம்மாண்ட வெளிச்சம் மட்டுமே பூமியில் எஞ்சியிருந்தது.
பாதிப்புகள்
தப்பிப் பிழைத்த உயிரினங்கள் மற்றும் நீண்டகாலப் பாதிப்புகள்
மனித தலைமுடியை விட 30 மடங்கு சிறியதான 2.5 மைக்ரோமீட்டர் அளவிலான இந்த நச்சுத் தூசுத் துகள்கள் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்களாக வளிமண்டலத்திலேயே தங்கிப் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தின.
இதனால் நிலத்தடிக்கு அடியிலோ, நீருக்கடியிலோ அல்லது பாறை இடுக்களிலோ புகலிடம் அமைத்துக் கொண்ட உயிரினங்கள் மட்டுமே இந்த கொடூர வெப்பக் காற்றிலிருந்து தப்பிப் பிழைக்க முடிந்தது.
ஆய்வின்படி, இந்த விண்வெளி மோதலும், அதைத் தொடர்ந்து உருவான வெப்பப் பொறியுமே டைனோசர்கள் உட்பட பூமியிலிருந்த 75 சதவீத உயிரினங்களின் தலையெழுத்தை நிரந்தரமாகத் தீர்மானித்தது என்பது உறுதியாகியுள்ளது.