கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இரண்டு செயலிகள், இந்திய பயனர்களிடமிருந்து தகவல்கலைத் திருடி சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதை சைபர் பாதுகாப்பு நிறுவனமான ப்ராடியோ கண்டறிந்திருக்கிறது. "ஃபைல் மேனேஜ்மென்ட் செயலிகளைப் போலக் காட்டிக் கொண்டு ஸ்பைவேர்களுடன் கூகுள் பிளே ஸ்டோரில் இரண்டு செயலிகள் பட்டியலிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கிறோம்." எனக் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். மொபைலில் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், பயனர்களின் அனுமதி இல்லாமலேயே மொபைலில் உள்ள முக்கியமான தகவல்களை இந்த செயலிகள் திருடுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், கூகுள் பிளே ஸ்டோரில் தாங்கள் எந்த தகவல்களையும் சேமிப்பதில்லை என குறிப்பிட்டிருக்கின்றன அந்த செயலிகள். அந்த இரண்டு செயலிகளுமே ஒரே கணக்கின் மூலமே பிளே ஸ்டோரில் அப்லோடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன விதமான தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன?
'File Recovery and Data Recover' மற்றும் 'File Manager' ஆகிய இரு சீன செயலிகளே மேற்கூறிய வகையில் ஸ்பைவேர்களைக் கொண்டு பயனர்களின் தகவல்களைத் திருடி வந்திருக்கின்றன. இந்த இரண்டு செயலிகளும் பிளே ஸ்டோரில் மொத்தமாக 15 லட்சம் முறைகளுக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போனில் இருந்து இமெயில் தகவல்கள், சமூக வலைத்தளக் கணக்குகள், தொடர்புகள், புகைப்படங்கள், ஆடியோ கோப்புகள், வீடியோக்கள், இருப்பிடத் தகவல்கள், மொபைல் எண் மற்றும் ஆபரேட்டர் குறித்த தகவல்கள் என அனைத்து விதமான தகவல்களையும் சேகரித்திருக்கிறது. இந்த தகவல்களை சீனாவில் உள்ள சந்தேகப்படும்படியான சர்வருக்கு அனுப்பியிருக்கிறது. இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்திருப்பவர்கள், உடனடியாக அதனை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.