புதிய AI கட்டமைப்பு மற்றும் கருவிகளை உருவாக்கி வரும் ஆப்பிள்
கடந்த ஆண்டு சாட்ஜிபிடி வெளியான பின்பு உலகளவில் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுள் கூகுள் ஒரு படி மேலே சென்று, தங்களுயை மென்பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன் வரையிலான வன்பொருட்கள் வரை அனைத்து தயாரிப்புகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. AI தொழில்நுட்பங்களையோ அல்லது கருவிகளையோ அறிமுகப்படுத்தாத முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அது ஆப்பிள் தான். 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்' என்பது தான் ஆப்பிளின் பாலிசி. பல்வேறு வகையான செயற்கை தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் கட்டமைப்புகளை அந்நிறுவனம் தற்போது உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆப்பிள் உருவாக்கி வரும் AI தொழில்நுட்பம்:
ஆப்பிளின் AI தொழில்நுட்ப மேம்பாடுகளை அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் ஜியானன்ட்ரியா மற்றும் க்ரெய்க் ஃபெடெரிகி ஆகிய இரண்டு மூத்த துணைத் தலைவர்களே முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுள் ஜியானன்ட்ரியா சிரியுடன் இணைத்து பயன்படுத்தும் வகையிலான AI சிஸ்டத்தையும், ஃபெடெரிகி உருவாக்க AI தொழில்நுட்ப வசதிகளின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றனராம். மிகவும் மேம்படுத்தப்ப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை உருவாக்கி பயனர்களுக்கான அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ஆப்பிள். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருக்கிறதாம் அந்நிறுவனம்.
ஆப்பிளின் திட்டம் என்ன?
ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் முக்கியமான அம்சம் மொழி மாதிரி தான். ஒரு AI கருவியின் திறனானது அதன் மொழி மாதிரியை அடிப்படையாகக் கொண்டே அமையும். ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பயன்படுத்தும் விதமாக அஜாக்ஸ் (Ajax) என்ற மொழி மாதிரியைக் கட்டமைத்திருக்கிறது ஆப்பிள். மேலும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வகையிலான சாட்பாட் ஒன்றையும் அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. தற்போது இதே போன்ற AI வசதியுடன் கூடிய சாட்பாட் ஒன்றை தங்கள் நிறுவன ஊழியர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கி, அதனை அந்நிறுவன ஊழியர்கள் பயன்படுத்தியும் வருகின்றனராம். கடந்த மாதம் IOS 17 இயங்குதளத்தை பயனாளர்களுக்கு வெளியிட்டது ஆப்பிள். அடுத்த IOS 18 இயங்குதளத்தில் மேற்கூறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.