புதிய 15 சீரிஸ் ஐபோன்கள், M3 சிப் மேக்புக்குகளை வெளியிடவிருக்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் இந்த மாதத் தொடக்கத்தில் தான் தங்களது வருடாந்திர நிகழ்வான WWDC 2023 நிகழ்வை நடத்தி முடித்தது. இந்த நிகழ்வில் தான், தங்களுடைய முதல் AR/VR ஹெட்செட்டான ஆப்பிள் விஷன் ப்ரோவை வெளியிட்டது அந்நிறுவனம். இந்நிலையில், ஆப்பிளின் அடுத்த நிகழ்வில் வெளியாகும் புதிய சாதனங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. ஆப்பிளின் இந்த புதிய நிகழ்வானது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. WWDC நிகழ்வில் ஹார்டுவேர் அப்டேட்கள் கொஞ்சமாகவும், சாப்ட்வேர் அப்டேட்கள் அதிகமாகவும் இடம்பெற்றிருந்தன. செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிகழ்வில், தங்களது பிரதான மின்னணு சாதனங்களான ஐபோன், மேக் புக் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றின் அடுத்த வெர்ஷன்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து வெளியாகவிருக்கும் ஆப்பிள் சாதனங்கள்:
ஒவ்வொரு வருடமும் பலவித அப்டேட்களுடன் ஒரு புதிய ஐபோன் மாடலை வெளியிடுவது ஆப்பிளின் வழங்கம். அதேபோல் இந்த வருடமும் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை செப்டம்பர் மாத நிகழ்வில் வெளியிடவிருக்கிறது ஆப்பிள். இந்த புதிய ஐபோனுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுடன், ஆப்பிள் வாட்ஸ் அல்ட்ரா என்ற தங்களது புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை தங்கள் ஸ்மார்ட்வாட்சின் டிசைனை ஆப்பிள் நிறுவனம் சற்றே மாற்றியமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ஐபேடு ப்ரோ, ஐபேடு ஏர், M3 , M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் 'சிப்'களுடன் கூடிய 13-இன்ச், 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களையும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.