இந்தியாவில் விசாரணையை சந்திக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்?
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு புதிய ஸ்டோர்களைத் திறந்தது ஆப்பிள். இதனைத் தொடர்ந்து அந்த ஸ்டோர்களில் ஆப்பிளின் விற்பனை ஒவ்வொரு மாதமும் கோடிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களுடைய ஆப் ஸ்டோர் கட்டண முறை தொடர்பாக பல உலக நாடுகளில் பிரச்சினையை சந்தித்து வரும் ஆப்பிள், இந்தியாவிலும் அது தொடர்பான வழக்கை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுடைய ஆப் ஸ்டோரில் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் கட்டண முறையை ஆப்பிள் அனுமதிப்பதில்லை. இதனால், ஆப்பிள் ஸ்டோரில் பட்டியலிடும் செயலிகள் வேறு தேர்வின்றி ஆப்பிளின் கட்டண முறையையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. மேலும், இதன் காரணமாக 30% என்ற அதீத கட்டணத்தை தன்னுடைய ஸ்டோரில் பட்டியலிடப்பட்டிருக்கும் செயலிகள் மீது விதித்திருக்கிறது ஆப்பிள்.
நடவடிக்கை எடுக்குமா CCI?
இது குறித்து இந்தியாவின் சந்தைப் போட்டி ஆணையமான CCI விசாரணை மேற்கொண்டு, மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் கட்டண சேவையை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அனுமதிக்க உத்தரவிடலாம் எனத் தெரிகிறது. ஆனால், உலகின் பல நாடுகளில் இது தொடர்பான பிரச்சினைகளை சந்தித்த போதும், தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பு ஆகிய காரணங்களைச் சுட்டிக்காட்டி மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் கட்டண சேவையை தங்களுடைய ஆப் ஸ்டோரில் அனுமதிக்க மறுத்திருக்கிறது ஆப்பிள். எனவே, இந்தியாவிலும் CCI-யின் ஆப்பிளுக்கு எதிராக ஆணையிடும் பட்சத்தில், அதனை ஆப்பிள் பின்பற்றும் என எந்த உத்தரவாதமும் இல்லை. இதே போன்று கூகுளின் ப்ளே ஸ்டோரிலும் மூன்றாம் தரப்பு நிறுவத்தின் கட்டண சேவையை அனுமதிக்க உத்தரவிட்டது CCI. ஆனால், அதற்கு மேல்முறையீடு செய்யவிருக்கிறது கூகுள்.