இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?
நாளை இந்தியாவில் தங்களது முதல் ஸ்டோரை மும்பையில் திறக்கவிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில், இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 6 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு மின்சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2020-ம் ஆண்டில் தான் இந்தியாவில் தங்களது ஆன்லைன் ஸ்டோரை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது ஆப்பிள். இந்தியாவில் ஆப்பிளின் நேரடி விற்பனையை மூன்றாம் தர சில்லறை வியாபாரிகளே மேற்கொண்டு வந்தனர். தற்போது தான் இந்தியாவில் தங்களது முதல் ஸ்டோரை திறக்கவிருக்கிறது ஆப்பிள். இந்த புதிய ஸ்டோர் திறப்புவிழாவை முன்னிட்டு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் இந்தியாவிற்கு வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் ஆப்பிளின் திட்டம்:
மே 4-ம் தேதி தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கிறது ஆப்பிள். உலகளவில் ஆப்பிளின் வருவாய் குறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், இந்தியாவில் தங்கள் கால்தடுத்தை வழுவாகப் பதிக்க இந்த புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது ஆப்பிள். மும்பை மற்றும் டெல்லியில் புதிதாக இரண்டு ஸ்டோர்களைத் திறப்பதன் மூலம், இந்தியாவில் தங்களது விற்பனையை மேலும் அதிகரிக்க முடியும் என நம்புகிறது அந்நிறுவனம். இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 6 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 4.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கும் மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்திருக்கிறது ஆப்பிள். இது கிட்டத்தட்ட 50% வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், இந்திய சந்தையில் தங்களது வருவாயை மேலும் பெருக்கவும் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள்.