Loading...
கூகுள் பே, போன்பேவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்; ஆனால் இந்த வசதி கிடையாது
இந்தியாவில் விரைவில் ஆப்பிள் பே அறிமுகமாகிறது

கூகுள் பே, போன்பேவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்; ஆனால் இந்த வசதி கிடையாது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2026
06:50 pm

செய்தி முன்னோட்டம்

ஐபோன் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் பே சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த சேவை இந்தியாவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் மிகவும் பிரபல டிஜிட்டல் கட்டண முறையான யுபிஐ வசதி இதன் ஆரம்பகட்ட வெளியீட்டில் இடம் பெறாது என்ற செய்தி வெளியாகியுள்ளது. யுபிஐ வசதியை இணைப்பதற்கு என்சிபிஐ ஒப்புதல் மற்றும் வங்கி கூட்டாண்மை தேவை என்பதால், ஆப்பிள் நிறுவனம் முதற்கட்டமாகக் கார்டு அடிப்படையிலான சேவையில் கவனம் செலுத்துகிறது.

கட்டண முறை

கிரெடிட் கார்டு மற்றும் என்எஃப்சி கட்டண முறை

ஆப்பிள் பே சேவையின் முதன்மை அம்சமாக கிரெடிட் கார்டுகள் மட்டுமே விளங்கும் எனத் தெரிகிறது.

பயனர்கள் தங்களின் விசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் வாலட் செயலியில் சேமித்து வைத்துக்கொண்டு, என்எஃப்சி வசதி கொண்ட கடைகளின் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்களில் தங்களின் ஐபோனைத் தட்டுவதன் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

இதனால் கூகுள் பே அல்லது போன்பே போன்ற செயலிகளுக்கு உடனடி மாற்றாக ஆப்பிள் பே மாறாது என்பது தெளிவாகிறது.

பேச்சுவார்த்தை

வங்கிகளுடனான பரிவர்த்தனைக் கட்டணக் பேச்சுவார்த்தை

இந்தியாவில் இச்சேவையை தொடங்குவதில் முன்னணி கிரெடிட் கார்டு வழங்கி வரும் வங்கிகளுடனான பரிவர்த்தனைக் கட்டணப் பேச்சுவார்த்தையே முக்கிய சவாலாக உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு கிரெடிட் கார்டு பரிவர்த்தனையிலும் 15 முதல் 20 பேசிஸ் புள்ளிகள் வரை பங்கைக் கோருகிறது.

ஆனால், நாட்டின் முக்கிய வங்கிகள் 10 பேசிஸ் புள்ளிகள் மட்டுமே தர முடியும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்த கட்டணப் பங்கீடு நுகர்வோரிடம் நேரடியாக வசூலிக்கப்படாமல், வங்கிகள் ஈட்டும் லாபத்தில் இருந்தே பகிரப்படும்.

ADVERTISEMENT

இந்தியா

சர்வதேச அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் சேவை

உலகளவில் ஆப்பிள் பே சேவை அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், தற்போது தான் இந்திய சந்தையில் அது கால்பதிக்க ஆயத்தமாகி வருகிறது.

வங்கிகளுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையும் பட்சத்தில், இந்திய ஐபோன் பயனர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை பாதுகாப்பாக போனில் சேமித்து வைத்து கட்டணங்களை செலுத்தும் அதிகாரப்பூர்வ வசதியைப் பெறுவார்கள்.

எனினும், ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT