Loading...
'என்னை என்ஃகவுண்டர் செய்தாலும் செய்வார்கள்': லடாக்கில் சோனம் வாங்சுக் அதிரடி பேச்சு
தம்மை என்ஃகவுண்டரில் கொல்வதற்குக் கூட வாய்ப்பிருப்பதாக சோனம் வாங்சுக் குறிப்பிட்டார்

'என்னை என்ஃகவுண்டர் செய்தாலும் செய்வார்கள்': லடாக்கில் சோனம் வாங்சுக் அதிரடி பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
04:25 pm

செய்தி முன்னோட்டம்

லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணை பாதுகாப்புக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வில், பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லே பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய சோனம் வாங்சுக், அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் தம்மை காவல்துறை என்ஃகவுண்டரில் கொல்வதற்குக் கூட வாய்ப்பிருப்பதாக தனக்கு எச்சரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டார். "ஏற்கெனவே என்னைச் சிறையில் அடைத்தார்கள், இப்போது என்னை என்ஃகவுண்டர் செய்தாலும் செய்யட்டும்; அதன் மூலமாவது இந்த நாடு விழித்துக்கொண்டால் சரிதான்" என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மக்கள் தீர்ப்பாயம்

மக்கள் தீர்ப்பாயம் மற்றும் விசாரணைக் குழு கோரிக்கை

கடந்த ஆண்டு லே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரின் மரணம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் அல்லது சுயாதீனமான 'மக்கள் தீர்ப்பாயம்' அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது AK-47 போன்ற தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வாங்சுக் வலியுறுத்தினார்.

டெல்லி போராட்டத்திற்காக குரல் கொடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT