ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேலும் ஒரு புதிய பிரச்சினை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி
ஆப்பிள் நிறுவனமானது தங்களது புதிய ஐபோன் 15 சீரிஸின் விற்பனையைத் தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடைவில்லை, அதற்குள் அந்தப் புதிய சீரிஸ் ஐபோனில் தொடர்ந்து கோளாறுகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள் ஆப்பிள் வாடிக்கையாளர்கள். முன்னதாக 15 சீரிஸ் ஐபோன் அளவுக்கு அதிகமாக சூடாவதாக சமூக வலைத்தளங்களில் புகார் அளித்து வந்தனர். எதனால் அந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என சில காரணங்களைக் கூறி, அதனை சரி செய்வதற்கான மென்பொருள் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். தற்போது அதனைத் தொடர்ந்து, 15 சீரிஸ் மாடலின் ப்ரோ வேரியன்டான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் திரையில் கோளாறு இருப்பதாக ஆப்பிள் வாடிக்கையாளர்கள் புகாரளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
புதிய பிரச்சினை என்ன?
புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஸ்கிரீன் பர்ன் பிரச்சினை எழுந்திருப்பதாகப் புகாரளித்து வருகிறார்கள் ஆப்பிள் வாடிக்கையாளர்கள். அதாவது, மொபைலின் திரையில் ஒரு முறை தோன்றும் பக்கமானது, நாம் அடுத்த பக்கத்திற்கு சென்ற பிறகும் சில நொடிகள் திரையிலேயே நீடித்திருக்கும். நாம் முன்னர் பார்த்த பக்கத்தின் சாயல் திரையில் இருக்க, புதிய பக்கம் அதன் மேலே தோன்றும். ஆப்பிளின் 15 சீரிஸின் ப்ரீமியம் போனான 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் மட்டுமே இந்தப் பிரச்சினை எழுந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர் வாடிக்கையாளர்கள். இந்த பிரச்சினையானு ஐபோனின் OLED திரையில் உள்ள கோளாறின் காரணமாகக் கூட எழுந்திருக்கலாம் என சிலர் சந்தேகிக்கின்றனர்.
என்ன செய்யவிருக்கிறது ஆப்பிள்?
வழக்கம் போல வாடிக்கையாளர்களின் இந்தப் புதிய புகார்களுக்கும் எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறது ஆப்பிள். முதலில் எதனால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்பது தெரிந்தால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஐபோனில் ஏற்பட்டிருக்கும் மென்பொருள் கோளாறு என்றால், மென்பொருள் அப்டேட்டை அளித்து ஆப்பிள் சரி செய்து விடும். சாதனத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு செயலிகளால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறதென்றால், அதற்கும் ஆப்பிள் பொறுப்பல்ல. இவற்றைத் தவிர்த்து, ஐபோனின் திரையில் கோளாறு என்றால் இதுவரை விற்பனை செய்த ஐபோன்கள் அனைத்தையும் அந்நிறுவனம் மாற்றிக் கொடுக்க வேண்டியிருக்கும். ஏனெனில், தங்களுடைய ஐபோன்களுக்கு ஒரு வருட வாரண்டியை அளித்திருக்கிறது ஆந்நிறுவனம். ஆப்பிள் என்ன செய்யவிருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.