ஐபோன் கேமரா சென்சார்கள், ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமானது அல்ல: டிம் குக் பகீர் தகவல்
ஆப்பிள் நிறுவனம் தனக்குத் தேவையான உதிரி பாகங்கள் அனைத்தையுமே, தாங்கள் தயாரிக்காமல் மற்ற தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வாங்கிக்கொள்கிறது என்ற வதந்தி பல ஆண்டுகளாகவே உலவி வருகிறது. எனினும், ஆப்பிளின் தீவிர ரசிகர்கள் இதை வெறும் வதந்தி என மறுத்துவந்தனர். ஆனால், அதை ஒத்துக்கொள்ளும் விதமாக, ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் பயன் படுத்தப்படும் துல்லியமான கேமரா, சோனி நிறுவனத்தின் சென்சர்கள் கொண்டு செய்யப்பட்டது என கூறியுள்ளார். மேலும் இது கடந்த 10ஆண்டுகளாக தொடரும் வர்த்தக பந்தம் எனவும் கூறியுள்ளார்.
ஐபோன் கேமரா சென்சார்கள் சோனி நிறுவனத்துக்கு சொந்தமானது
சமீபத்தில், குக், சோனி நிறுவனத்தின் குமாமோட்டோ வசதிகளையும் (Kumamoto facility) சுற்றிப் பார்க்க சென்றார். இதனை உறுதி செய்யும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். டிம் குக்கின் இந்த அதிகாரபூர்வ தகவல், ஆப்பிள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, பல திடுக்கிடும் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஐபோனில் பயன்படுத்தப்படும் முன் மற்றும் பின்பக்க க்ளாஸ் ஷீட்டுகளை, அமெரிக்க நிறுவனத்திடம் இருந்தும், OLED பேனல்களை சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களிடம் இருந்தும் வாங்குவதாக தெரிவிக்கின்றன. மொபைல் தயாரிப்பு மற்றும் தரத்தில் முன்னோடி என கருதப்படும் ஆப்பிள் நிறுவனமே, தனது உதிரி பாகங்களுக்கு மற்ற நிறுவனங்களை சார்ந்து இருக்கிறது என்பது சற்று அதிர்ச்சியான விஷயம் தான்.