ட்ராக்கிங் சாதனங்களை பாதுகாப்பாக மாற்ற கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டுமுயற்சி!
பயனர்கள் தங்களுடைய பொருட்களை தொலைத்தால் எளிதாகக் கண்டறியும் வகையில் புதிய சாதனம் ஒன்றை ஆப்பிளும் கூகுளும் வெளியிட்டிருந்தன. ஆப்பிள் 'ஏர்டேக்' மற்றும் கூகுளின் 'டைல்' ஆகிய சாதனங்களை நம்முடைய கைப்பை அல்லது பர்ஸ் போன்ற பொருட்களில் வைத்திருந்தால், அவை தொலைந்தாலும் அதில் இருக்கும் அந்தச் சிறிய சாதனத்தின் மூலம் அதன் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும். ஆனால், இதனை தவறான வழியில் ஒருவருக்குத் தெரியாமல் அவரைப் பின்தொடரப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. இதனால், இந்த சாதனங்களைத் தவறான வகையில் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன ஆப்பிளும் கூகுளும். தற்போது அதன் ஒரு பகுதியாக இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன.
ஆப்பிள் மற்றும் கூகுளின் கூட்டு முயற்சி:
தங்கள் நிறுவனம் அல்லது தங்கள் சாதனம் மட்டும் என்று இல்லாமல் மொத்தமாக அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் வகையில் இந்தப் புதிய திட்டத்தை அந்நிறுவனங்கள் முன்னெடுத்திருக்கின்றன. இதன் மூலம் ஆப்பிளின் ஏர்டேக் மற்றும் கூகுளின் டைல் ஆகிய சாதனங்களை இரண்டு இயங்குதளங்களிலும் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும். ஒருவருக்கும் தெரியாமல் இந்த ப்ளூடூத் சாதனங்கள் மூலம் பின்தொடர முயற்சி செய்தால், அதுகுறித்து அந்நபரை அலர்ட் செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கின்றன. மேலும், இது போன்ற சாதனங்களை தயாரிக்கும் சாம்சங், டைல், சிப்போலோ, யூபி செக்யூரிட்டி மற்றும் பெப்பில்பீ ஆகிய நிறுவனங்களும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி தங்கள் ப்ளூடூத் ட்ராக்கிங் சாதனங்களை தயாரிக்க ஒப்புக் கொண்டிருக்கின்றன.