Loading...
அப்பல்லோ 11 விண்கல விண்வெளி வீரர்கள் உயிரைக் காத்த சாதாரண பேனா: ஏலத்தில் ரூ. 7 கோடிக்கு மேல் விற்பனையாகி சாதனை
அப்பல்லோ 11 விண்கல விண்வெளி வீரர்கள் உயிரைக் காத்த பேனா

அப்பல்லோ 11 விண்கல விண்வெளி வீரர்கள் உயிரைக் காத்த சாதாரண பேனா: ஏலத்தில் ரூ. 7 கோடிக்கு மேல் விற்பனையாகி சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

விண்வெளி வரலாற்றின் மிக முக்கிய மைல்கல்லான அப்பல்லோ 11 திட்டத்தில், நிலவில் கால்பதித்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் நிலவிலேயே சிக்கி உயிரிழக்கும் அபாயத்திலிருந்து ஒரு எளிய பேனா காப்பாற்றியுள்ளது. இந்த வியக்கத்தக்க வரலாற்று உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விண்வெளி வீரர்களின் உயிரைக் காத்த அந்த பேனா, தற்போது ஏலத்தில் இந்திய மதிப்பில் சுமார் 7.2 கோடி ரூபாய்க்கு ($857,600) விற்பனையாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆபத்து

ஆபத்தில் முடிந்த வரலாற்று சாதனை

ஜூலை 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கினர்.

எனினும், அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டபோது, விண்கலத்தின் எஞ்சினை இயக்கும் மிக முக்கியமான சர்க்யூட் பிரேக்கர் சுவிட்ச் உடைந்திருப்பதை ஆல்ட்ரின் கவனித்தார்.

அந்த சுவிட்ச் வேலை செய்யாவிடில், விண்கலத்தின் எஞ்சினை இயக்க முடியாது; அவர்கள் என்றென்றும் நிலவிலேயே சிக்கி உயிரிழக்க நேரிடும் என்ற அபாயகரமான சூழல் உருவானது.

யோசனை

உயிரைக் காத்த எளிய பேனா

பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தாலும் இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய முடியாத நிலையில், பஸ் ஆல்ட்ரின் ஒரு புத்திசாலித்தனமான யோசனையைக் கையாண்டார்.

மின்சார விபத்தை தவிர்க்க உலோக பொருட்களை பயன்படுத்தாமல், தன்னிடம் இருந்த பிளாஸ்டிக்கால் ஆன 'டியூரோ ராக்கெட்' பேனாவை அந்த சர்க்யூட் துளையினுள் செலுத்தினார்.

அது சரியாகப் பொருந்தவே, மின்சுற்று முழுமையடைந்து எஞ்சின் இயங்கியது; அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

ADVERTISEMENT

ஏலம்

ஏலத்தில் குவிந்த பெரும் தொகை

சுமார் 57 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாலருக்கும் குறைவான விலையில் வாங்கப்பட்ட இந்த சாதாரண பேனா, தற்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற சோதேபிஸ் (Sotheby's) ஏல நிறுவனத்தால் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது.

விண்வெளி ஆர்வலர்களின் கடும் போட்டிக்கு இடையே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேனா மற்றும் உடைந்த சுவிட்ச் ஆகியவை $857,600 என்ற அசாத்திய விலைக்கு ஏலம் போயின.

சரியான நேரத்தில் ஆல்ட்ரின் எடுத்த சாமர்த்தியமான முடிவும், அந்த ஒரு எளிய பேனாவும் இல்லையென்றால் மனிதகுலத்தின் மிகப்பெரிய விண்வெளி சாதனை ஒரு பெரும் சோகத்தில் முடிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ADVERTISEMENT