
சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் 38 கோடி பயனர்களை, அதிகரித்து வரும் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான மோசடி கண்டறிதல் தீர்வை வெளியிட்டுள்ளது.
இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் ஊடுருவலுடன் ஃபிஷிங் மோசடிகள், தீங்கிழைக்கும் இணைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏர்டெல்லின் சமீபத்திய முயற்சி பல தளங்களில் வாடிக்கையாளர்களை லைவ்வாக நிகழ்நேரத்தில் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு மோசடி வலைத்தளங்கள் மற்றும் இணைப்புகளை உடனடியாகக் கண்டறிந்து தடுக்கும் திறன் கொண்டது.
இது ஓடிடி செயலிகள், இன்டர்நெட் பிரவுசர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தளங்களில் செயல்படுகிறது.
செயல்பாடு
எப்படி செயல்படுகிறது?
ஒரு பயனர் மோசடி என வகைப்படுத்தப்பட்ட வலைத்தளத்தை அணுக முயற்சிக்கும்போது, அவர்கள் ஆபத்தை விளக்கும் எச்சரிக்கை பக்கத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.
இது பயனர் தலையீடு தேவையில்லாமல் உடனடி விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்கிறது.
இந்த சேவை அனைத்து ஏர்டெல் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் பயனர்களுக்கும் கூடுதல் செலவில்லாமல், ஆப் இன்ஸ்டால் அல்லது மேனுவலாக செயல்படுத்துதல் தேவையில்லாமல் தானியங்கி முறையில் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றக் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, டொமைன் வடிகட்டுதல் மற்றும் நேரடி இணைப்பு கண்காணிப்பு ஆகியவற்றை இணைக்கும் பல அடுக்கு அச்சுறுத்தல் கண்டறிதல் கட்டமைப்பை ஏர்டெல் உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்த அமைப்பு, தொடர்ச்சியான பாதுகாப்பை வழங்குவதற்காக, வளர்ந்து வரும் மோசடிகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றியமைக்கிறது.