லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராப்புறங்களில் இணையசேவை வழங்கத் திட்டமிட்டிருக்கும் ஏர்டெல் மற்றும் கூகுள்
இந்தியாவின் பெருகி வரும் டிஜிட்டல் பயன்பாட்டோடு டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது எனக் கூறினாலும், 2021-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கிராப்புறங்களில் வாழும் மக்களில் 35% மக்களே இணைய வசதியைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் இணையவசதி இல்லாத கிராமப்புறங்களிலும் அதிவேக இணையவசதியை வழங்க கூகுளுடன் கைகோர்த்திருக்கிறது ஏர்டெல். கலிபோர்னியாவில் இருக்கும் தங்களுடைய ஆய்வகத்தில் கூகுள் மேம்படுத்தி வரும் லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவில் கிராமப்புறங்களிலும் இணைய வசதியை வழங்கத் திட்டமிட்டிருக்கிறது ஏர்டெல். தற்போது இணைய வசதி வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பத்தை விட விரைவாகவும், எளிதாகவும் இந்த லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்டு இணைய வசதி வழங்க முடியும் என நம்புகின்றன கூகுளும், ஏர்டெல்லும்.
லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்டு இணைய வசதி:
லேசர் கதிர் மூலம் நீண்ட தூரத்திற்கு தகவல்களை அனுப்பு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது கூகுள். கிட்டத்தட்ட ஃபைபர் ஆப்டிக் முறையைப் போல் தான் இந்த லேசர் தொழில்நுட்பமும் செயல்படும். ஆனால், இதனை நடைமுறைப்படுத்த புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நமது பயன்பாட்டில் இருக்கும் பவர் லைன்கள் மற்றும் செல் டவர்கள் மூலமாகவே இந்த லேசர் கதிர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிவேக இணையச் சேவையை வழங்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை ஃபைபர் ஆப்டிக் முறையை விட விரைவாகவும், எளிதாகவும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் ஏர்டெல் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.