புகைப்படப் போட்டியில் பரிசை வென்ற AI தொழில்நுட்பம்.. சர்ச்சையை எழுப்பிய சம்பவம்!
சமீப காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து புதிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பி வருகின்றன. அப்படி ஒரு புதிய சர்ச்சை ஒன்றைக் கிளப்பியிருக்கிறது சோனி உலக புகைப்பட போட்டியில் அளிக்கப்பட்ட விருது ஒன்று. சோனியின் இந்த புகைப்படப் போட்டியில் உலகெங்கும் இருந்து பல புகைப்பட கலைஞர்கள் தங்கள் புகைப்படங்களை அனுப்பி பங்கெடுத்திருந்தினர். ஜெர்மனியைச் சேர்ந்த போரிஸ் எல்டக்சென் என்பவரின் புகைப்படத்தையும் ஒரு பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுத்திருந்தது தேர்வுக்குழு. ஆனால், தான் போட்டிக்கு அனுப்பிய புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் எனக்கூறி, அந்த விருதை வாங்க மறுத்துவிட்டார் போரிஸ். இது மீண்டும் படைப்பாளிகள் மற்றும் AI-க்கு இடையேயான விவாதத்தை எழுப்பியிருக்கிறது.
AI-யை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா?
மேலும், தான் ஏன் இந்தப் போட்டியில் AI உருவாக்கிய புகைப்படத்துடன் பங்கெடுத்தேன் என்பது குறித்து போரிஸ் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, "இத்தகைய போட்டிகள் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை கண்டறிந்து அதனை போட்டியில் இருந்து நீக்குகின்றனவா என்பதை கண்டறியவே, இந்தப் போட்டியில் பங்கெடுத்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை" எனக் கூறியிருக்கிறார். பொதுவெளியில் இந்த சம்பவம் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், புகைப்படத்துறையும், அதில் AI-க்கள் நுழைவது குறித்து நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது, என்று தெரிவித்துள்ளார் அவர். அந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களும், இது போன்ற நிகழ்வுகள் அடுத்து நிகழாமல் இருப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய போரிஸூடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.