
நீங்கள் அழுத்தும் key-இன் ஓசையை வைத்தே உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறியும் AI கருவிகள்
செய்தி முன்னோட்டம்
எந்தவொரு தொழில்நுட்பமும் ஆக்கத்திற்கு மட்டுமல்ல அழிவுக்கும் பயன்படும். அதற்கு ஒரு உதாரணமாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நூதன முறையில் பாஸ்வேர்டைக் கண்டறிய முடியும் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கின்றனர்.
இங்கிலாந்தின், துர்ஹாம், சர்ரே மற்றும் ராயல் ஹாலோவே ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை செய்திருக்கிறார்கள்.
நம்முடைய கணினி அல்லது லேப்டாப்பின் விசைப்பலகையில் (Keyboard) உள்ள ஒவ்வொரு விசையை அழுத்தும் போது, அதிலிருந்து வெளியாகும் ஓசை சற்றே மாறுபடும். இந்த வித்தியாசத்தை நம்மால் உணர முடியாது, ஆனால் செயற்கை நுண்ணறிவால் உணர முடியும்.
விசைப்பலகையில் இருந்து வெளியாகும் ஓசையை வைத்தே, நாம் என்ன தட்டச்சு செய்கிறோம் என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிந்திருக்கிறது AI.
செயற்கை நுண்ணறிவு
புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதி:
ஸூம் மற்றும் பிற வகையான வீடியோ மற்றும் ஆடியோ கான்ஃபரன்ஸிங் பெருகியிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.
ஒரு ஸூம் மீட்டிங்கின் போது, நமது பாஸ்வேர்டை தட்டச்சு செய்கிறோம் என வைத்துக் கொள்வோம், ஹேக்கர்களால், நமது கணினியின் மைக்ரோபோனில் பதிவாகும் விசைஅழுத்தத்தின் சத்தத்தை வைத்தே நாம் என பாஸ்வேர்டை பதிவிடுகிறோம் என்பதைக் கண்டறிய முடியுமாம்.
இதற்கு ஒரு மேக்புக்கில் உள்ள 36 விசைகள் ஒவ்வொன்றையும், 25 முறை அழுத்தி AI கருவிக்குப் பயிற்சியளித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் பயிற்சியளிக்கப்பட்ட AI கருவியானது, நாம் என்ன தட்டச்சு செய்கிறோம் என்பதனை ஸூம் காலின் வழியாகக் கிடைக்கும் சத்தத்தைக் கொண்டு 93% துல்லியமாகக் கண்டறிந்திருக்கிறது.