செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புதிய வைரஸ்! பயப்பட வேண்டாம்; மருத்துவ உலகில் ஏஐ நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கும் 16 புதிய வைரஸ்களை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆர்க் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஈவோ 1 மற்றும் ஈவோ 2 ஆகிய மரபணு ஏஐ மாடல்கள் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த புதிய செயற்கை வைரஸ்கள் ஈ.கோலை பாக்டீரியாக்களை மட்டுமே தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்றும், மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்களுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
பரிசோதனை
ஏஐ மாடல்களின் உருவாக்கம் மற்றும் ஆய்வகப் பரிசோதனை
ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம் மூலம் முழுமையான மரபணுத் தொடரை உருவாக்கி, அதை ஆய்வகத்தில் வெற்றிகரமாக செயல்பட வைத்திருப்பது அறிவியலில் இதுவே முதல்முறையாகும்.
மில்லியன் கணக்கான டிஎன்ஏ தரவுகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட இந்த ஏஐ மாடல்கள், ஃபை எக்ஸ்-174 என்ற பாக்டீரியோபேஜ் வைரஸின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய டிஎன்ஏ வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளன.
ஏஐ உருவாக்கிய 300 சிறந்த வடிவமைப்பு மாதிரிகளில் இருந்து 16 வைரஸ்கள் பாக்டீரியாவிற்குள் சென்று தங்களைப் பெருக்கிக் கொள்ளும் அளவுக்கு முழுமையான உயிரோட்டத்துடன் செயல்பட்டன.
சில செயற்கை வைரஸ்கள் இயற்கை வைரஸ்களை விட வேகமாகவும் திறம்படவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அச்சம்
மருத்துவத் துறைப் புரட்சியும் உயிரியல் பாதுகாப்பு அச்சங்களும்
மருத்துவத் துறையில் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத அபாயகரமான பாக்டீரியா தொற்றுகளை அழிக்கும் பேஜ் தெரபி சிகிச்சைக்கு இந்த முயற்சி ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்.
இருப்பினும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் புதிய வைரஸ் மரபணுக்களை உருவாக்கும் திறன் திறக்கப்பட்டுள்ளதால், இது உயிரியல் பாதுகாப்பு மற்றும் உயிரியல் அச்சுறுத்தல் தொடர்பான கவலைகளையும் எழுப்பியுள்ளது.
மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளை ஏஐ தவறாக உருவாக்காத வண்ணம், இத்தகைய தொழில்நுட்பங்களை உலகளவில் முறைப்படுத்தவும் கடுமையான பாதுகாப்பு விதிகளைக் கொண்டுவரவும் தற்போதே நிபுணர்கள் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.