AI-க்களால் மனிதர்களைப் போல சிந்திக்க முடியாது.. ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது!
'அடுத்த சில ஆண்டுகளில் மனிதர்களின் 80% வேலைகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களே செய்யும்', எனத் தெரிவித்திருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்தே AI ஆராய்ச்சியாளர் பென் கோயெர்ட்செல். 'ஆனால், அது நல்ல விஷயம் தான்' எனத் தெரிவித்திருக்கும் கோயெர்ட்செல், செயற்கை பொது நுண்ணறிவு குறித்து ஆராய்ச்சி செய்யும் சிங்குலாரிட்டிநெட் என்ற ஆராய்ச்சி குழுவின் நிறுவனர் ஆவார். மனிதர்களின் அறிவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனுடன் கூடிய AI-யையோ செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence) என்கின்றனர். அது குறித்த ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருக்கிறார் பென் கோயெர்ட்செல். அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், "AI-க்கள் ஆபத்தானவை எனக்கூறி அதன் ஆராய்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எனக்கு உடன்பாடில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.
AI-க்கள் சுவாரஸ்யமானவை:
"செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் சுவாரஸ்யமானவை, ஆனால் அவற்றால் இன்னும் மனிதர்களைப் போல சிந்திக்க முடியாது. அவற்றின் எல்லையே அவற்றுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் தளம் தான். அதனை மீறி AI-க்களால் சிந்திக்க முடியாது. மனிதர்களைப் போல AI-க்கள் சிந்திக்க வேண்டும் என்றால் அதற்கு ப்ரோகிாரமிங் மற்றும் ட்ரெயினிங்கைக் கடந்து பல படிநிலைகளை நாம் தாண்ட வேண்டும். ஆனால், கூடிய விரைவில் அது நிகழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. பொய்யான தகவல்களை பரப்புவதால் AI-க்களை தடை செய்ய வேண்டும் என்றால், முதலில் நாம் இணையத்தை தான் தடை செய்ய வேண்டும். பல காலமாகவே இணையம் பொய்யான தகவல்களின் புகலிடமாகவே இருக்கிறது. நம் தேவைக்கும் அதிகமான தகவல்களை உங்கள் விரல்நுணியில் இணையம் கொடுக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.