LOADING...
இஸ்ரோ ஜாம்பவான்களின் அகஸ்தியா-1: 24 மணிநேரத்தில் ஏவக்கூடிய அதிநவீன ராக்கெட்; விண்வெளித் துறையில் சூரத் ஸ்டார்ட்அப்பின் அதிரடி
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளின் புதிய ராக்கெட்டின் சிறப்பம்சங்கள்

இஸ்ரோ ஜாம்பவான்களின் அகஸ்தியா-1: 24 மணிநேரத்தில் ஏவக்கூடிய அதிநவீன ராக்கெட்; விண்வெளித் துறையில் சூரத் ஸ்டார்ட்அப்பின் அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Mar 30, 2026
11:20 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பாரத் ஸ்பேஸ் வெஹிக்கிள் நிறுவனம் உருவெடுத்துள்ளது. இஸ்ரோவில் 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மூத்த விஞ்ஞானிகளால் 2024 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது அகஸ்தியா-1 என்ற 28 மீட்டர் உயரமுள்ள ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இது 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.

தொழில்நுட்பம்

திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தின் ரகசியம்

இந்தியாவின் பெரும்பாலான சிறிய ரக ராக்கெட்டுகள் (எஸ்எஸ்எல்வி போன்றவை) திட எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், அகஸ்தியா-1 ராக்கெட் திரவ ஆக்சிஜன் மற்றும் மண்ணெண்ணெய் (LOX/RP-1) கொண்டு இயங்கும் திரவ எரிபொருள் இன்ஜின்களைப் பயன்படுத்துகிறது. இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு முன்பே அதன் இன்ஜின்களை முழுமையாக சோதிக்க முடியும். இதனால் விண்வெளியில் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

24 மணி நேரம்

24 மணிநேரத்தில் விண்ணில் பாயும் திறன்

அகஸ்தியா-1 ராக்கெட்டின் மற்றுமொரு சிறப்பு, அதன் லான்ச் ரெடினஸ் ஆகும். பாதுகாப்புத் துறை அல்லது பேரிடர் காலங்களில் அவசரமாகச் செயற்கைக்கோள்களை ஏவ வேண்டிய சூழல் ஏற்பட்டால், வெறும் 24 மணிநேர அறிவிப்பில் இந்த ராக்கெட்டை ஏவ முடியும். 28 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட், சிறிய ரக செயற்கைக்கோள் சந்தையை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

Advertisement

பின்னணி

யார் இந்த அகஸ்தியா-1 பின்னணியில் உள்ளவர்கள்?

இந்தத் திட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையத்தின் முன்னாள் இயக்குநரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் என்.வேதாசலம் இந்தத் குழுவில் உள்ளார். இவருடன் இணைந்து, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுடன் எஸ்எல்வி-3 திட்டத்தில் பணியாற்றிய மூத்த பொறியாளர் எஸ்.வி.சர்மா மற்றும் ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர் பாவின் படேல் ஆகியோர் இந்த ராக்கெட்டைத் தயாரித்து வருகின்றனர்.

Advertisement

குஜராத்

குஜராத் இந்தியாவின் மூன்றாவது விண்வெளித் தளமா?

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் ஆகியவற்றைத் தொடர்ந்து, குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கோடினார் பகுதியில் புதிய விண்வெளித் தளம் அமைக்க அகஸ்தியா-1 குழுவினர் முன்மொழிந்துள்ளனர். இதற்கு மத்திய அரசின் இன்-ஸ்பேஸ் அமைப்பும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்துள்ளது. இது உறுதியானால், இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமையும் முதல் விண்வெளித் தளம் இதுவாகத்தான் இருக்கும்.

தனியார்

தனியார் விண்வெளிப் போட்டியில் இந்தியா

2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விண்வெளி கொள்கை, தனியார் நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மற்றும் அக்னிகுல் காஸ்மோஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, தற்போது பாரத் ஸ்பேஸ் வெஹிக்கிள் நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இஸ்ரோவின் அதே தொழில்நுட்ப நேர்த்தியுடன், குறைந்த செலவில் அடிக்கடி செயற்கைக்கோள்களை ஏவுவதே இவர்களின் முதன்மை நோக்கமாகும்.

Advertisement