சூரியனை முதல் முறையாகப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம்
கடந்த செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலமானது, அதன் திட்டமிட்ட இலக்கான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இந்நிலையில், சூரியனை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் ஆத்தியா L1 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் SUIT (Solar Ultraviolet Imaging Telescope), சூரியனின் முழு வட்டுப் புகைப்படத்தைப் படம்பிடித்திருக்கிறது இஸ்ரோ. 200-400 nm அலைநீளத்தில் படம்பிடிக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களை தங்களது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். சூரியனை ஆய்வு செய்வதற்கான நம்முடைய முதல் விண்வெளி திட்டத்தின் மூலம், சூரியனை முதல் முறையாகப் படம்பிடித்திருக்கிறது இந்தியா.