புனேயில் பரவும் ஜிகா வைரஸ்: இந்த தொற்று கர்ப்பிணிப் பெண்களை எப்படி பாதிக்கும்? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
புனேவில் மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புனேவில் பதிவாகும் 6வது ஜிகா வைரஸ் பாதிப்பாகும். எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், கருவில் உள்ள குழந்தைக்கு மைக்ரோசெபாலி(அசாதாரண மூளை வளர்ச்சியின் காரணமாக தலை சிறியதாக இருக்கும் நிலை) ஏற்படலாம். ஜிகா வைரஸ் நோய், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போலவே ஏடிஸ் கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947 இல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது.
ஜிகா வைரஸின் அறிகுறிகள்
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால், ஜிகா வைரஸ் தாயிடமிருந்து கருவுக்கு பரவி, பிறக்கும் போது பக்கவாதம் ஏற்படும் நிலையை உண்டாக்குவதுடன் பிற சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும். மேலும். இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருவுக்கும் நரம்பியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த தொற்று ஏற்பட்டால் சிலருக்கு அறிகுறிகளே காட்டுவதில்லை. சிலருக்கு இது மிகவும் லேசான அறிகுறிகளையும் காட்டுகிறது. வேனற்கட்டி, மூட்டு வலி, அதிக காய்ச்சல், கான்ஜுன்க்டிவிடிஸ், தசை வலி போன்ற அறிகுறிகள் பொதுவாக காணப்படுகின்றன. தற்போது, ஜிகா வைரஸுக்கு தடுப்பூசிகள் இல்லை மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை செய்யப்படுகிறது.