இன்று சர்வதேச காச நோய் தினம்: இந்த தொற்று நோயின் அறிகுறிகளும்; பாதுகாப்பு முறைகளும்
உலகெங்கிலும், பல மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் தொற்று நோய், இந்த காச நோய். அந்த நோயை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த, ஆண்டுதோறும், உலக சுகாதார அமைப்பு (WHO), மார்ச் 24 அன்று உலக காசநோய் தினமாக அனுசரிக்கிறது. காசநோய் பற்றி பல கட்டுக்கதைகளும், தவறான கருத்துகளும் மக்களிடத்தில் உலவி வருகின்றன. உதாரணமாக, காசநோய் என்பது ஒரு குணப்படுத்த முடியாத கொடிய நோய் என்ற எண்ணம் நிலவி வருகிறது. அது தவறு. காச நோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோயாகும். ஆனால், அறிகுறிகள் தென்படும் முன்னர், அந்த நோயை கண்டறிவது கடினம். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம்.
காசநோய் தினத்தின் வரலாறும், அறிகுறிகளும்
1882 ஆம் ஆண்டில், மார்ச் 24 -ஆம் தேதி, காசநோயை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியம் எனப்படும் கிருமியை கண்டுபிடித்ததாக, டாக்டர் ராபர்ட் கோச் அறிவித்தார். அவரின் கண்டுபிடிப்பை நினைவுகூரும் விதமாக, இந்த நாளை WHO சர்வதேச காசநோய் தினமாக அறிவித்தது. காசநோய் (TB) என்பது நுரையீரலை முக்கியமாக பாதிக்கும், ஒரு தொற்று நோயாகும். இருமல் மற்றும் தும்மலின் போது, காற்றில் வெளியாகும் சிறிய நீர்த்துளிகள் மூலம், ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவக்கூடிய பாக்டீரியாக்களால் இது ஏற்படுகிறது. இரத்தம் அல்லது சளியுடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்கு இருமல், மூச்சுத்திணறல், இருமல் மற்றும் சுவாசத்தின் போது வலி, திடீர் எடை இழப்பு, சோர்வு, காய்ச்சல், பசியிழப்பு போன்றவை காசநோயின் அறிகுறிகளாக அறியப்படுகிறது.