சளி, காய்ச்சல், உடல் அசதியா? உங்களுக்கு வந்திருப்பது, கோவிட் தொற்றா அல்லது H3N2 தொற்றா என எப்படி கண்டறியலாம்?
கொரோனா பாதிப்பிற்கு பிறகு, தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு காரணம், H3N2 வைரஸ் கிருமி என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் கிருமியினால், நாட்டில் இறப்புகள் நிகழ ஆரம்பிக்க, தற்போது, வல்லுநர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டு வருகின்றனர். எனினும், கொரோனா பாதிப்பும் இன்னும் முழுவதுமாக ஓய்ந்தபாடில்லை. இந்த இரண்டு நோய் தொற்றுகளுக்குமே ஒரே போன்ற அறிகுறிகள் இருப்பது தான் இப்போது கவலை தரும் விஷயம். ஆனால், இந்த இரு வைரஸ் கிருமிகளும் ஒன்றல்ல. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிருமி, பருவகாலத்தில் தோன்றுவது. கொரோனா போல, மாறுபாடு அடையாது. ஆனால், 2019 முதல் இப்போது வரை, கொரோனா வைரஸ் பல மாற்றமடைந்துள்ளது. அவற்றில் ஆதிக்கம் செலுத்துவது ஓமிக்ரான் ஆகும்.
அறிகுறிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்
மூச்சுத்திணறல், இருமல், அதிக காய்ச்சல் மற்றும் நிமோனியாவின் அறிகுறிகள் போன்றவை, H3N2 நோய்த்தொற்றின் அறிகுறிகளாகும். மறுபுறம், தலைவலி, உடல் வலி, தொண்டைபுண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை கோவிட் அறிகுறிகள் ஆகும். ஆனால், அறிகுறிகளை மட்டுமே கொண்டு, நோய்த்தொற்றுகளை தெளிவாக வேறுபடுத்த முடியாது. அதற்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். இந்த இரு வைரஸ் நோய் தொற்றுகளும், பாதிக்கப்பட்ட நபருடன், நீங்கள் நெருங்கி இருந்தாலோ, அவர்கள் மூக்கு, மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் எச்சில் துளிகளின் மூலம், காற்று வழியாக பரவக்கூடியது. அதனால், பொதுமக்கள், கவனத்துடன் இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த இரு நோய் தொற்றிற்கும் இருக்கும் மற்றொரு ஒற்றுமை, சமூக இடைவேளை. ஆம், சமூக இடைவெளியும், தனிமைபடுத்திக்கொள்ளுதல் மூலமாக, நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.